

திருவனந்தபுரம்: த கேரளா ஸ்டோரி 2 படத்துக்கு 2 வார தடை விதித்து மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023-ல் வெளியான ‘த கேரளா ஸ்டோரி' திரைப்படம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக ‘த கேரளா ஸ்டோரி 2' தயாரிக்கப்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தை தடை செய்ய கோரி ஸ்ரீதேவ் நம்பூதிரி உள்ளிட்டோர் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த படத்தில் கேரளாவை வகுப்புவாத கண்ணோட்டத்தில் காட்டுவதாகவும், இது சட்டம், ஒழுங்கை பாதிக்கக் கூடும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நேற்று மூத்த வழக்கறிஞர் ஸ்ரீகுமார் ஆஜராகி, படம் வெள்ளிக் கிழமை (இன்று) திரையரங்குகளில் வெளியாகும் என்றும், வெளிநாட்டு விநியோக உரிமைகள் ஏற்கெனவே விற்றுவிட்டதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதனைக் கேட்ட நீதிபதி, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்பதாகவும், இந்த வாதங்கள் முடியும் வரை திரைப்படம் வெளியிடுவதை ஒத்திவைக்கலாம் என்றும் அப்போது குறிப்பிட்டார்.
அப்போது வழக்கறிஞர் ஸ்ரீ குமார் கூறும்போது, “திரைப்படம் தொடர்பான 2 நிமிட டீசரை மட்டும் வைத்து அதற்கு தடை வழங்குவது கூடாது. இந்தத் திரைப்படம் அனைத்து சட்டத் தேவைகளையும் பூர்த்தி செய்து உள்ளது.
மேலும், படத்துக்கு மத்திய திரைப்பட வாரியமும் சான்றளித்துள்ளது. அதன் பின்னரும், உயர் நீதிமன்றம் அதை நிறுத்தக் கூடாது” என்று அவர் வாதிட்டார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதி, “த கேரளா ஸ்டோரி 2 படத்துக்கு எதிரான நிலுவையில் உள்ள மனுக்கள் இறுதியாக விசாரிக்கப்பட்டு முடிவு செய்யும் வரை படத்தை வெளியிட வேண்டாம்.
2 வாரங்களுக்கு படத்தை திரையிட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மேலும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் பின்பற்றவில்லை” என்றும் தெரிவித்தார்.