

புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த இருவர் அடல் அறக்கட்டளை விருது பெற்றுள்ளனர். இந்த விருதுகள் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாய்பாய் நினைவாக டெல்லியில் வழங்ப்பட்டன.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் ‘அடல் பவுண்டேஷன்’ எனும் சமூக சேவை நிறுவனம் செயல்படுகிறது. மத்தியப் பிரதேசம் இந்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்திற்கு நாடு முழ்வதிலும் பல கிளைகளும் உள்ளன.
இதன் சார்பில் வருடந்தோறும் சிறந்த சமூக சேவகர்களுக்கு அட்டல் அறக்கட்டளை விருதுகள் வழங்கப்படுகின்றன. இவை, சிறப்பை அங்கீகரிக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் சமூக சேவை செய்பவர்களை தேர்வு செய்து வழங்கப்படுகின்றன. புதுமைக்கான விருதுகளாக மருத்துவம், கல்வி, ஸ்டார்ட்-அப் உள்ளிட்ட பல துறைகளின் சிறப்பான பங்களித்தவர்களுக்கு வழங்கப்படுகின்றன. தொழில்முனைவோர் மற்றும் அறக்கட்டளைகளும் கவுரவுக்கபடுகின்றனர்.
2025-ஆம் வருடத்திற்கான கவுரவ் விருதுகள் டெல்லியில் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி, புதுடெல்லி கஸ்தூரிபா காந்தி சாலையில் உள்ள நியூ மகராஷ்டிரா சதன் கட்டிடக் கலை அரங்கத்தில் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் ஓ.பி.ஆர் நினைவு தொண்டு அறக்கட்டளையின் ஓர் அங்கமான கேஆர்டி கேரியர் அகாடமியின் இயக்குநர் டாக்டர் வீ.செல்வராஜுக்கு வழங்கப்பட்டது.
இது, போட்டித் தேர்வுகளுக்காக இலவசமாக கல்வி பயிற்சி சேவையை சென்னையிலும், திருச்சியிலும் செய்து வருகிறது. மற்றொரு தமிழரான கீழ்பாக்கம் லைப்லைன் மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் ஜே.எஸ்.ராஜ் குமாருக்கும் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அடல் அறக்கட்டளையின் தேசிய தலைவர் அபர்ணா சிங் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் தலைமை காப்பாளர் சியாம் ஜாஜூ முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமைக் காப்பாளர் சியாம், ‘இந்த விருதுகள், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மதிப்பீடுகள், தொலைநோக்கு பார்வை மற்றும் மரபால் ஊக்கமளிக்கப்பட்டவை. இந்த விருதுகள், நேர்மை, புதுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் தேசிய வளர்ச்சியை முன்னெடுக்கின்றது’ எனத் தெரிவித்தார் .
முன்னாள் முதல்வர் ஓமந்தூரார் ‘Agrarian Reforms and Parity Economy’ என்ற நூலின் மறுபதிப்பை, வெளிட்டதற்கு, ஓ.பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளையின் அறங்காவளர் தேவி மோகனுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.