

வலையப்பட்டி காஷ்யப் நாதாலயாவின் 31-வது இசைவிழாவில் விருது பெற்ற கலைஞர்களுடன் தமிழக கலை, பண்பாட்டுத் துறை இயக்குநர் எஸ்.வளர்மதி, கர்னாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம், வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமண்யம், வலையப்பட்டி நாதாலயா அமைப்பின் தலைவர் ஏ.வெங்கட்ரமணி, செயலர் எஸ்.மலர்வண்ணன்.
சென்னை: வலையப்பட்டி காஷ்யப் நாதாலயாவின் 31-வது இசைவிழாவில் தமிழக கலை, பண்பாட்டுத்துறை இயக்குநர் எஸ்.வளர்மதி பங்கேற்று கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். வலையப்பட்டி காஷ்யப் நாதாலயாவின் 31-வது இசைவிழா சென்னை நங்கநல்லூரில் உள்ள கணேஷ் மண்டலி சங்கரா மகாலில் கடந்த 21-ம் தேதி தொடங்கியது.
இதில் தமிழக கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் எஸ்.வளர்மதி, கர்னாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். விழாவில் கர்னாடக இசைக் கலைஞர் நித்ய மகாதேவன், வயலின் வித்வான் டி.கே.ராமானுஜாச்சார்யுலு ஆகியோருக்கு வலையப்பட்டி நாதாலயா சிரோன்மணி விருதும், கிளாரி னெட் வித்வான்கள் வேலூர் வி.பி.என். ராஜாராமன், வி.பி.என்.சேதுராமன் ஆகியோருக்கு காருக்குறிச்சி நினைவு விருதும், நாமசங்கீர்த்தனக் கலைஞர் செங்கோட்டை ஹரிஹர சுப்பிரமணியனுக்கு மதுரை சோமு நினைவுவிருதும், மிருதங்கக் கலைஞர் பட்ரி சதீஷ்குமாருக்கு வலையப்பட்டி விருதும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வலையப்பட்டி காஷ்யப் நாதாலயா அமைப்பின் தலைவர் ஏ.வெங்கட்ரமணி வரவேற்புரை ஆற்றினார். தொடக்கவுரை நிகழ்த்திய அருணா சாய்ராம், “கர்னாடக சங்கீதம் தெய்வீகம் நிறைந்தது.
கர்னாடக இசையின் முக்கிய மையமாக சென்னை திகழ்கிறது. இசைக் கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் விருது, அவர்கள் குடும்பத்துக்கு கொடுக் கப்படும் விருதாகும்” என்றார்.
தலைமையுரை ஆற்றிய எஸ்.வளர்மதி, “இசை என்பது பண்பாட்டின் அடையாளம். கலைஞர்களை ஊக்குவிக்கும் மருந்தாக பாராட்டு, விருதுகள் விளங்குகின்றன. பாமர மக்களையும் சென்று சேரும் வகையில் இசை இருக்க வேண்டும். அந்த வகையில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ஜன.14-ம் தேதி முதல்வர் ஸ்டாலின், ராஜ ரத்தினம் மைதானத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்” என்றார்.
ஏற்புரை வழங்கிய நித்ய மகாதேவன், “வலையப்பட்டி காஷ்யப் நாதாலயாவின் விருது கிடைத்ததில் மிகவும் பெருமை. இசை அனைவரையும் உயிர்ப்புடன் வைத்திருக்கும்” என்றார். வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியம், கலைஞர்களை வாழ்த்தி பேசும்போது, “மனிதனை பக்குவப்படுத்துவது இசை. பண்டைய காலத்தில் அரசர்களின் ஆதரவில்கோயில்களில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பல கலைஞர்களுக்கு இதனால் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இசைவிழா டிச.25-ம் தேதி வரை நடைபெறுகிறது. நிறைவு நாளில் வலையப்பட்டி காஷ்யப் குழந்தை நட்சத்திர விருதும், கலைஞர்களுக்கான உதவித் தொகையும் வழங்கப்படும்” என்றார்.
வலையப்பட்டி நாதாலயா அமைப்பின் செயலர் வலையப்பட்டி எஸ்.மலர்வண்ணன் நன்றியுரை ஆற்றினார். இதையடுத்து நித்ய மகாதேவன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.