

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஒரே நாளில் திருமணம் செய்ய இருந்த சகோதரிகள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சகோதரிகள் இருவரும் ஷோபா (25) மற்றும் விமலா (23) என தெரியவந்துள்ளது. இவர்கள் ஜோத்பூரில் உள்ள மனாய் கிராமத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு சனிக்கிழமை (பிப்.21) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. கல்யாண கொண்டாட்டத்துக்கு தயாராக இருந்த அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுளள்னர்.
அவர்களது தற்கொலை மரணத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த இருவரும் தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் விஷம் அருந்தி உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் உடற்கூறு ஆய்வறிக்கை வந்த பிறகு மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்த சகோதரிகளின் உடல்நிலை சனிக்கிழமை அன்று அதிகாலை மிகவும் மோசமடைந்தது. அதையடுத்து அவர்களது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களுக்கான இறுதி சடங்குகளை ஏற்பாடு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார், உயிரிழந்த சகோதரிகளின் உடலை கைப்பற்றி, பிரதேச பரிசோதனைக்கு அனுப்பினர். அதன் பின்னர் மீண்டும் அவர்களது உடல், குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தச் சூழலில் ஷோபா மற்றும் விமலாவின் மரணத்துக்கு காரணம் அவர்களின் தந்தை தீப் சிங்கின் சகோதரர்கள்தான் என குற்றச்சாட்டு வைத்துள்ளார் அவர்களின் மாமா ஜஸ்வந்த் சிங். உயிரிழந்த இருவருக்கும் தொடர்ந்து திருமணம் சார்ந்த அழுத்தம் தரப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக ‘சினேகா’ தற்கொலை தடுப்பு உதவி எண்: 044-24640050, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் (iCall Pychosocial) உதவி எண் - 022-25521111 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.