

பிரதிநிதித்துவப் படம்
கோட்டா: ராஜஸ்தானில் ஒரு எருமை மற்றும் அதன் கன்றுக்குட்டிக்கு 2 பேர் உரிமை கொண்டாடியதையடுத்து இந்த சர்ச்சைக்கு மருத்துவ அறிக்கை மூலம் தீர்வு காணப்பட்டது.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: நாராயண் விஹாரைச் சேர்ந்த ராம் லால் என்பவர் தான் வளர்த்த எருமை மற்றும் கன்றுக்குட்டி ஒரு மாதத்துக்கு முன் காணாமல் போனதாக புகார் அளித்தார். அவரும் விடாமல் தேடிவந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் ராம்சந்திரபுரா மர்கியா பஸ்தியில் வசிக்கும் இந்திரஜித் கேவத் என்பவரின் கொட்டகையில் எருமை மாட்டுடன் அதன் கன்றுக்குட்டியும் கட்டப்பட்டிருந்ததை பார்த்தார்.
உடனடியாக, ராம் லால், இந்திரஜித் கேவத்தை சந்தித்து அந்த மாடுகள் தனக்கு சொந்தமானவை என்று உரிமை கோரினார். ஆனால், இந்திரஜித் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படி கிராமத்தில் இருந்து அந்த எருமையை வாங்கியதாகவும் அதற்கு தற்போது 7 வயது ஆவதாகவும் கூறினார்.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றியதையடுத்து அவர்கள் குன்ஹாடி காவல் நிலையத்தை அணுகினர். முதற்கட்ட விசாரணையில் இருதரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். ராம் லால் அந்த எருமைக்கு சுமார் 4-5 வயது ஆகிறது என்றும் அது சமீபத்தில்தான் கன்று ஈன்றது என்றும் கூறினார். அதேசமயம், இந்திரஜித் அந்த எருமைக்கு 7 வயது ஆவதாக கூறினார்.
பரஸ்பரம் புரிதல் அடிப்படையில் இந்த சர்ச்சைக்கு தீர்வு காண முடியாததால் கால்நடை மருத்துவ நிபுணரின் கருத்தை பெற காவல் துறை முடிவு செய்தது.
இதற்காக ஒரு கால்நடை மருத்துவகுழு அமைக்கப்பட்டு அந்த எருமை கோட்டாவின் மோக்பாடா பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. எருமையின் பற்கள் மற்றும் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அதற்கு இந்திரஜித் கூறியது போல 7 வயது அல்ல ராம் லால் கூறியது போல 4-5 வயதுதான் ஆகிறது என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, மருத்துவ அறிக்கை மற்றும் துணை ஆதாரங்களின் அடிப்படையில் ராம் லாலிடம் அந்த எருமைமாடு மற்றும் அதன் கன்றுக்குட்டி ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்தனர்.