

மதுரா: உத்தர பிரதேசத்தின் மதுராவில் நடைபெற்ற திருமணத்தில் இரு மணமகன்களுக்கு தலா ரூ.1 கோடி மதிப்பிலான பண மாலைகள் அணிவிக்கப்பட்டன.
உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டம், நாக்லா பாண்டா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி யோகேந்திர சிங். இவரது தம்பி குஷாபால் சிங். இருவரின் மகன்களுக்கும் முத்செராஸ் கிராமத்தைச் சேர்ந்த பெண்களுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கடந்த 21-ம் தேதி திருமண ஊர்வலத்தில் மணமகன்கள் பிரசாந்த், கன்ஹா ராகவ் ஆகியோர் குதிரைகளில் மணமகள்களின் கிராமத்துக்கு ஊர்வலமாக சென்றனர். நெருங்கிய உறவினர்கள் பரிசுகளை வழங்கினர். அப்போது மைத்துனர் யோகேஷ் குமார், இரு மணமகன்களுக்கும் தலா ரூ.1 கோடியில் பணமாலைகளை அணிவித்தார்.
500 ரூபாய் நோட்டு கட்டுகளில் தயாரிக்கப்பட்ட பண மாலைகள் 100 அடி நீளம் வரை இருந்தன. வீட்டின் மாடியில் மணமகன்கள் நின்றிருக்க பணமாலை தெரு வரை நீண்டு சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து நாக்லா பாண்டா மக்கள் கூறும்போது, “எங்கள் சமுதாயத்தில் மணமகனுக்கு பண மாலை அணிவிப்பது வழக்கம். தற்போது திருமணம் நடைபெற்ற இரு மணமகன்களின் அக்கா ஜிஜாஜியின் கணவர் யோகேஷ் குமார், ராஜஸ்தானின் நந்தோலா கிராமத்தின் தலைவராக உள்ளார். அவர் ரூ.2 கோடி ரூபாயில் இரு பண மாலைகளை தயார் செய்து மணமகன்களுக்கு அணிவித்தார்.
இருவரும் பண மாலைகளை அணிந்தவாறு சிறிது தூரம் குதிரைகளில் ஊர்வலமாக சென்றனர். பின்னால் சென்ற உறவினர்கள் பண மாலைகளை சுமந்து் சென்றனர். கிராம மக்களில் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர்” என்றனர்.