

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் பெயரை குறிப்பிடாமல் கிண்டல் செய்து உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “நாட்டில் தீவிரமான விஷயம் வரும்போதெல்லாம் நாட்டை விட்டு ஓடிவிடும் இரண்டு கோழைகள்" என்று கூறினார்.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாளில், கோடீன் இருமல் சிரப் சட்டவிரோத வர்த்தகம் குறித்து கேள்வி எழுப்பிய சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள், சட்டவிரோத வர்த்தகம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு நடந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டினர்.
சமாஜ்வாதி கட்சியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த யோகி ஆதித்யநாத், ”நாட்டில் இரண்டு கோழைகள் இருக்கிறார்கள், ஒருவர் டெல்லியிலும் மற்றவர் லக்னோவிலும் உள்ளனர். நாட்டில் எப்போதெல்லாம் ஒரு விவாதம் வருகிறதோ, அப்போதெல்லாம் இந்த நபர்கள் ஓடிவிடுகிறார்கள்.
உங்கள் 'பாபுவா (அகிலேஷ் யாதவ்)' விஷயத்திலும் அதேதான் நடக்கிறது என்று நான் நினைக்கிறேன். அவரும் மீண்டும் இங்கிலாந்துக்கு ஒரு பயணமாக நாட்டை விட்டுச் சென்றுவிடுவார், நீங்கள் இங்கே கத்திக்கொண்டே இருப்பீர்கள்.
நீங்கள் இதை ஆழமாக ஆராய்ந்தால், இது அனைத்தும் ஒரே விஷயத்தில்தான் வந்து முடிகிறது என்று நான் நினைக்கிறேன். எப்படியாவது, சமாஜ்வாதி கட்சியுடன் தொடர்புடைய ஏதேனும் ஒரு தலைவர் அல்லது தனிநபர் இதில் சம்பந்தப்பட்டிருப்பார். சிரப் வழக்கில் நடந்த பரிவர்த்தனையும், சமாஜ்வாதி கட்சியின் லோஹியா வாஹினியின் ஒரு அலுவலகப் பொறுப்பாளரின் கணக்கு வழியாகவே நடந்துள்ளது. எஸ்.டி.எஃப் இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது.” என்று அவர் கூறினார்.
முதல்வர் கூறிய இரண்டு கோழைகள் என்ற கருத்துக்கு பதிலடி கொடுத்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இது பாஜக-வுக்குள் நிலவும் உட்கட்சிப் பூசலை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாகும் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் வெளியிட்ட எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “இது சுய ஒப்புதல். டெல்லி - லக்னோ சண்டை இந்த நிலையை எட்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அரசியலமைப்புப் பதவிகளில் இருப்பவர்கள் குறைந்தபட்சம் கண்ணியத்தையாவது கடைப்பிடிக்க வேண்டும், வரம்புகளை மீறக்கூடாது.
ஆளும் கட்சி தனது உட்கட்சி பிரச்சினைகளைப் பொதுவெளியில் வெளிப்படுத்த வேண்டாம். பாஜக தலைவர்கள் தங்கள் கட்சியின் உட்கட்சிப் பூசலைச் சந்திக்குக் கொண்டு வரக்கூடாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.