

சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் டிச.24 முதல் 28-ம் தேதி வரை 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை (டிச.23) வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 24, 25 தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 26, 27 தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் 28-ம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 26-ம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட ஓரிரு இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும். தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நாளை இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை (குளிர்) அளவுகளின்படி அதிகபட்சமாக மலைப்பகுதியான ஊட்டி, குன்னூரில் தலா 7 டிகிரி செல்சியஸ், சமவெளிப்பகுதியான கரூர் பரமத்தியில் 17 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 21 செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.