

புதுடெல்லி: மும்பையில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களைக் கொல்ல திட்டமிட்டிருந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, இவர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டதாகக் கூறி, அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்துள்ளார்.
சர்வதேசக் குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுளளார். அவர் சிறையிலிருந்தபடியே தனது கும்பலை இயக்குவதாகப் புகார்கள் உள்ளன. இந்தக் கும்பல் பாலிவுட் பிரபலங்களையும் தொழிலதிபர்களையும் மிரட்டிப் பணம் பறித்து வருகிறது. கடந்த அக்டோபர் 18 அன்று நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. பிஷ்னோய் கும்பலின் இந்த தாக்குதலிலிருந்து அவர் தப்பினார். இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைதாகியுள்ளனர்.
இந்நிலையில், டெல்லி தொழிலதிபர் மற்றும் அமிதாப் பச்சனைச் சுட லாரன்ஸ் கும்பலைச் சேர்ந்த இருவர் திட்டமிட்டிருந்தனர். பஞ்சாபைச் சேர்ந்த இவர்கள் டெல்லியிலும் மும்பையிலும் கைதாகினர்.
விகாஸ் குமார் என்ற விக்கி ஜலந்தரையும், தீபக் சிங் என்ற தீப் பஞ்சாபின் தர்ன் தாரனையும் சேர்ந்தவர்கள். 1984 சீக்கியர் கலவரம் குறித்து அமிதாப் கூறியதாகச் சொல்லப்படும் கருத்துக்காக அவரைச் சுடத் திட்டமிட்டதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 15-ம் தேதி இரவு அமிதாப் எந்த விளக்கமும் இன்றி ‘காப்பாற்றப்பட்டேன்’ என்று மட்டும் பதிவிட்டார். இது இந்தக் கைதுகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. கடந்த மாதம் அவருக்கு மின்னஞ்சலில் 3 மிரட்டல்கள் வந்திருந்தன.
இதற்கிடையில், அமிதாப்புக்கும் அவர் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கோல்டி தில்லான் என்பவர் முகநூலில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். “குண்டு துளைக்காத கூண்டும் அமிதாப்புக்கு உதவாது. இருவர் சிக்கினாலும் எங்கள் செயல்பாட்டுக்குத் தடை இருக்காது’’ என்று பதிவிட்டுள்ளார்.