

2027-ம் ஆண்டு இந்திய அரசியலில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமையப்போகிறது. உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட ஏழு முக்கிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்க இருக்கிறது. இதை எதிர்கொள்ளத் தயாராகி வரும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு, எதிர்க்கட்சிகளை விட மிகப் பெரிய சவாலாக உருவெடுத்து நிற்பது சாமானிய மக்களின் சமையல் அறை பொருளாதாரம்தான்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கொஞ்சம் தணிந்திருந்த உணவுப் பணவீக்கம், 2026 அக்டோபரில் மீண்டும் 8.94 சதவீதம் என்ற உச்சத்தைத் தொட்டிருப்பது எளிய மக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
‘எல் நினோ’ பாதிப்பால் உண்டான பருவமழை பற்றாக்குறையால் உள்நாட்டில் காரீப் மற்றும் ரபி பருவ விளைச்சல் பாதிப்பு ஒருபுறம், மறுபுறம் புவி அரசியல் மோதல்களால் சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ள சமையல் எண்ணெய், வாகன எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் இந்திய விவசாயிகளையும் நுகர்வோரையும் ஒன்று சேர்ந்து நெருக்குகிறது.
நாட்டின் சில்லறைப் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு வரம்பான 6 சதவீதத்தைத் தாண்டி இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை பணவீக்கத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி குறுகிய காலக் கடனுக்கான வட்டியை 0.25 புள்ளிகள் உயர்த்தியது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்தடுத்து வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டியிருக்கும்.
கடந்த 2023-24 காலகட்டத்தில் இந்தியாவை உலுக்கிய உணவுப் பணவீக்கப் புயல், அதைவிடப் பல மடங்கு வீரியத்துடன் 2027-ல் திரும்பவும் வருமா? - இந்தக் கேள்விதான் தற்போது டெல்லியின் அதிகார மையங்களின், இந்தியப் பொருளாதார நிபுணர்களின் தூங்கத்தை தொலைக்கச் செய்து கொண்டிருக்கிறது.
எல் நினோவின் கோரத் தாண்டவம்
கடந்த 2023 ஜூலை முதல் 2024 டிசம்பர் வரை நீடித்த ‘தீவிரமான’ எல்-நினோவால் சராசரி உணவுப் பணவீக்கம் 8.5 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. தற்போது 2026 ஜூன் முதல் எல் நினோ அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு அதிதீவிரமான நிலையை எட்டியுள்ளது. வானிலை ஆய்வு அமைப்புகளின் கணிப்புப்படி, 2027 ஜனவரி முதல் மார்ச் வரை இது ‘மிகத் தீவிரமான’ நிலையில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 12.6 சதவீதமும், அக்டோபரில் தொடங்கி இருக்கும் வடகிழக்கு பருவமழை நவம்பர் 15 நிலவரப்படி இயல்பை விட 33 சதவீதமும் குறைவாகவே பதிவாகியுள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பிஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வறண்ட வானிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜூன் மாதத்தில் 5.3 சதவீதமாக இருந்த நுகர்வோர் உணவு விலை பணவீக்கம், அக்டோபரில் 23 மாத உச்சமான 8.9 சதவீதத்தை எட்டியுள்ளது.
விலைவாசியை உயர்வின் இரட்டைக் காரணிகள்:
வெப்பமும் விதைப்புச் சரிவும்:
பருவமழை பொய்த்ததால் காரீப் விளைச்சல் சரிந்த நிலையில், மண்ணில் ஈரப்பதம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் குளிர்கால (ரபி) விதைப்பும் வெகுவாகக் குறைந்துள்ளது. குறிப்பாகக் கோதுமை விதைப்பு 15.3 சதவீதம், கொண்டைக்கடலை 21.6 சதவீதம் மற்றும் கடுகு 8.4 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் 2026-27 குளிர்காலம் வழக்கத்தை விட வெப்பமாகவும் குறுகியதாகவும் இருக்கும் என்பது மகசூலை மேலும் குறைக்க கூடும்.
புவி அரசியல் சூழல்:
ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் மேற்கு ஆசிய பதற்றத்தால் சூரியகாந்தி எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாமாயில், சோயாபீன் எண்ணெய் விலைகளும் உயர்ந்துள்ளன. மேலும், உரத் தயாரிப்புக்கு மிக முக்கியமான கந்தகத்தின் (Sulphur) இறக்குமதி விலை 3 மடங்கு உயர்ந்து இருப்பது வேளாண் உற்பத்திச் செலவைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது.
விளைச்சல் குறைவும் விலை உயர்வும்
விளைச்சல் சரிவால் மொத்த விற்பனை மண்டிகளில் விலைவாசி விண்ணை முட்டியுள்ளது.
மகாராஷ்டிரா (லத்தூர்): துவரம் பருப்பு விளைச்சல் 40-50 சதவீதம் குறைந்துள்ளதால், ஒரு குவிண்டால் விலை ரூ.6,500-லிருந்து ரூ.10,300-க்கு உயர்ந்துள்ளது.
கர்நாடகா (தாவெனகெரே): மக்காச்சோளம் ரூ.1,844-லிருந்து ரூ.3,172 வரை உயர்ந்துவிட்டது.
மத்தியப் பிரதேசம் (தேவாஸ்): சோயாபீன்ஸ் குவிண்டால் விலை ரூ.4,200-லிருந்து ரூ.7,200 ஆக எகிறியுள்ளது.
ராஜஸ்தான் - ஹரியானா: ராஜஸ்தானில் கம்பு ரூ.2,025-லிருந்து ரூ.2,250 ஆகவும், ஹரியானாவில் பருத்தி ரூ.7,150-லிருந்து ரூ.9,020 ஆகவும் விலை அதிகரித்துள்ளன.
மத்திய அரசின் தானியக் கையிருப்பு நிலை:
2023-24-ஆம் ஆண்டைப் போல் இல்லாமல், மத்திய அரசு சேமிப்புக் கிடங்குகளில் தானியக் கையிருப்பை 3.3 மடங்கு உயர்த்தியுள்ளது. அரிசி 55.50 மில்லியன் டன், கோதுமை 46.30 மில்லியன் டன் கையிருப்பில் உள்ளன. பருப்பு வகைகளில் கொண்டைக்கடலை 1.60 மில்லியன் டன், துவரம் பருப்பு 1 மில்லியன் டன், பச்சைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு 1.20 மில்லியன் டன் என மொத்தம் 3.8 மில்லியன் டன் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
2027-ன் பொருளாதார, அரசியல் சவால்கள்
2027-ஆம் ஆண்டு மோடி அரசுக்கும் பாஜக-வுக்கும் மிக முக்கியமான தேர்தல் ஆண்டாகும். 2027 பிப்ரவரியில் பஞ்சாப், அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கும், ஆண்டின் இறுதியில் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 5 மாநிலங்களில் தற்போது பாஜக தான் ஆட்சியில் உள்ளது.
அன்றாட சமையல் பொருட்களின் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர வாக்காளர்களிடையே ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை (Anti-incumbency) உருவாக்கும். குறிப்பாக உத்தரப் பிரதேசம் போன்ற விவசாயிகள் அதிகம் உள்ள மாநிலங்களில் விளைச்சல் குறைவும், விலைவாசி உயர்வும் இரட்டைத் தாக்கத்தை ஏற்படுத்தும். வருமானத்தின் பெரும்பகுதி உணவுப் பொருட்களுக்கே செலவாகும் போது பிற நுகர்பொருட்களின் விற்பனையும் கடுமையாகப் பாதிக்கும்.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க கடனுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் ரிசர்வ் வங்கி உள்ளது. ஆனால், உணவுப் பணவீக்கம் 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளதால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களைக் குறைக்க முடியாமல் ரிசர்வ் வங்கி கடந்த முறை வட்டியை உயர்த்தியது. வரவிருக்கும் நிதிக் கொள்கைக் கூட்டத்திலும் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.
என்னதான் தீர்வு?
அரிசி மற்றும் கோதுமை கையிருப்பு சிறப்பாக இருப்பதால் வெளிச்சந்தை விற்பனை மூலம் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை மற்றும் காய்கறிகளில் கையிருப்பு குறைவாகவே உள்ளது.
சர்வதேச சந்தையிலும் விலை அதிகமாக இருப்பதால், அடுத்த சில மாதங்களில் கொண்டைக்கடலை, மசூர் பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் இறக்குமதி வரிகளை முழுமையாக நீக்கி, சந்தை விநியோகத்தை உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே 2027-ல் ஏற்படும் அரசியல் மற்றும் பொருளாதாரப் பின்னடைவை மோடி அரசால் வெற்றிகரமாகத் தவிர்க்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.