

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சின கன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு, ஷிமோகா உள்ளிட்ட மாவட்டங்களில் துளு மொழி பரவலாக பேசப்படுகிறது.
திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்த இம்மொழியும் கன்னடத்தைப் போலவே, ஏராளமான தமிழ் சொற்களை கொண்டிருக்கிறது. இங்கு வாழும் மக்கள் தங்களின் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் மங்களூருவில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் துளு மொழிக்கு மாநிலத்தின் இரண்டாவது கூடுதல் ஆட்சி நிர்வாக மொழி அந்தஸ்தை வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதற்கு அனைத்து அமைச்சர்களும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையை துளு மொழி சங்கத்தினரும், அம்மக்களும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அதே வேளையில் கன்னட அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.