

பாட்னா: நாடு முழுவதும் நீட்-யுஜி மறுதேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. பிஹார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் நடைபெற்ற நீட் மறுதேர்வின்போது, ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’ திரைப்பட பாணியில் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட முயன்றது. இதை போலீஸார் முறியடித்துள்ளனர்.
இந்த கும்பல் விண்ணப்பதாரர்களுக்குப் பதிலாக நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக ‘சால்வர்களை' (மாற்று நபர்களை) ஏற்பாடு செய்ததாக காவல் துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் மருத்துவ மாணவர்கள் மற்றும் தேர்வு செயல்பாட்டில் ஈடுபட்டிருந்த பயோமெட்ரிக் (கைரேகை சரிபார்ப்பு) நிறுவன ஊழியர்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கயா நகரில் உள்ள ஏஎன்எம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவ மாணவரான அர்பித் ராஜ், இந்த மோசடி குழுவைச் சேர்ந்த முக்கிய நபர்களில் ஒருவர் என்று காவல் துறை சந்தேகிக்கிறது. அர்பித் ராஜிடம் ஏற்கெனவே 2024 நீட் வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வரும் மயங்க் காஷ்யப் என்ற மற்றொரு மருத்துவ மாணவரும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தேர்வு செயல்பாட்டில் ஈடுபட்டிருந்த பயோமெட்ரிக் நிறுவனத்தைச் சேர்ந்த 14 ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயோ மெட்ரிக் நிறுவன ஊழியர் போல் நடித்து மயங்க் காஷ்யப் ஹசன்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்துக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, இந்த மோசடி நெட்வொர்க் காவல் துறையின் கண்காணிப்பில் வந்தது.
விசாரணையின் போது அவர்தான் முதலில் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து லக்கி சராயில் உள்ள கேஆர்கே உயர்நிலைப் பள்ளி மற்றும் கேந்திரிய வித்யாலயா ஆகிய இடங்களில் காவல் துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைகளின்போது, 7 விண்ணப்பதாரர்கள் மற்றும் இந்த மோசடி நடவடிக்கையுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.