

எம்.பி. பதவியை ராஜினாமா செய்த கோயல் மல்லிக்
கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மற்றொரு பின்னடைவாக, அவரது கட்சியின் மாநிலங்களவை எம்.பி. கோயல் மல்லிக் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கோயல் மல்லிக் என்று பிரபலமாக அறியப்படும் ருக்மணி மல்லிக், பெங்காலி திரைப்பட நடிகை ஆவார். இவர், திரிணமூல் சார்பில் இந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார். ஆனால் பதவியேற்ற 3 மாதங்களிலேயே அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறேன். இதை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார். பதவி விலகியதற்கான காரணம் குறித்து கோயல் மல்லிக் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது. ஆளும் கட்சியாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இத்தோல்வியை தொடர்ந்து திரிணமூல் கட்சி அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. இதில் புதிய பின்னடைவாக கோயல் மல்லிக்கின் ராஜினாமா அமைந்துள்ளது.
முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மதன் மித்ரா சட்டப்பேரவை அதிருப்தியாளர் அணியில் இணைந்தார். கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியை முன்னிறுத்துவதிலேயே கட்சி கவனம் செலுத்துவதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். என்றாலும் ஊழல் வழக்கில் மதன் மித்ராவின் மனைவி மற்றும் இரண்டு மகன்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய அடுத்த நாளே மித்ரா இந்த முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.