

சொத்துக்காக தந்தையை சுட்டுக் கொன்ற மகன் நிகில்
காசியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மோடிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி ஓம் சவுத்ரி (55). செல்வாக்கு மிக்க விவசாயியான இவருக்கு, டெல்லி- மீரட் விரைவுச்சாலை அருகே 75 பிகா நிலம் மற்றும் வணிக வளாகக் கடைகள் என சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.
இவருக்கு மனைவி அனிதா, நிகில், நீஷூ என்ற மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் நிகில் (32) மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர். ஏற்கெனவே நிகிலுக்கு சில கடைகளையும் 25 பிகா நிலத்தையும் ஹரிஓம் கொடுத்திருந்தார்.
தனது பெயருக்கு பங்கை உடனே சட்டப்படி மாற்றித் தருமாறு நிகில் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், மதுப் பழக்கத்தால் சொத்துகளை நிகில் அழித்துவிடுவார் எனக் கூறி, சொத்து மாற்றப் பத்திரங்களை எழுதிக் கொடுக்க ஹரி ஓம் மறுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நிகில் போதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த நிகில், தனது தாயின் கண் எதிரே துப்பாக்கியை எடுத்து தந்தையை நோக்கி சரமாரியாகச் சுட்டார். முகம், மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் 3 குண்டுகள் பாய்ந்ததில் ஹரிஓம் உயிரிழந்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள நிகிலைத் தேட 5 தனிப்படை அமைத்துள்ளனர். மேலும், 2018-ம் ஆண்டிலும் குடும்பத் தகராறில் தனது தம்பி நீஷுவை நிகில் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்திய சம்பவமும் தற்போது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.