

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிராம்பூரில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் குளறுபடிக்கு பொறுப்பேற்று, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் 1,000 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ குணால் கோஷ் காரில் சென்றார். வழியில் உத்தர் பாரா என்ற இடத்தில் குணால் கோஷின் காரைக் கருப்புக் கொடிகள் மற்றும் தடிகளுடன் மறித்த கும்பல் ஒன்று, முட்டைகளையும் செங்கற்களையும் வீசி கண்ணாடிகளை உடைத்தது. கண்ணாடிச் சிதறல்கள் தன் மீது விழுந்ததால் முன்னேற முடியாமல் போனதாகவும், இடதுபுறத்தில் காயம் ஏற்பட்டதாகவும் குணால் கோஷ் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தத் தாக்குதலுக்குப் பின் கொல்கத்தா திரும்பிய அவர், பாஜக குண்டர்களே இதற்குக் காரணம் எனவும், போலீஸார் யாரும் அங்கு இல்லை எனவும் குற்றம்சாட்டி, மாநில காவல் துறை தலைமையகத்தில் புகார் அளிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.