டிச. 26 முதல் ரயில் கட்டணம் உயர்கிறது: புறநகர் ரயில், சீசன் கட்டணத்தில் மாற்றம் இல்லை

டிச. 26 முதல் ரயில் கட்டணம் உயர்கிறது: புறநகர் ரயில், சீசன் கட்டணத்தில் மாற்றம் இல்லை
Updated on
2 min read

புதுடெல்லி: நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி முதல் ரயில் கட்டணம் கி.மீ.க்கு 1 முதல் 2 பைசா வரை உயர்கிறது. புறநகர் ரயில், மாதாந்திர சீசன் கட்டணத்தில் மாற்றம் இல்லை.

ரயில் கட்டணம் கடந்த ஜூலை மாதம் சிறிய அளவில் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நடைமுறைச் செலவுகள் அதிகரித்து வருவதை சமாளிக்க, நீண்டதூரப் பயணத்துக்கான கட்டணத்தை உயர்த்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி சாதாரண ரயில்களில் 215 கி.மீ. தூரத்துக்கு மேற்பட்ட பயணத்துக்கான கட்டணம் கி.மீ.க்கு 1 பைசா உயர்த்தப்படும். மெயில் மற்றும் விரைவு ரயில்களில் பயணம் செய்வோருக்கான கட்டணம் கி.மீ.க்கு 2 பைசா உயர்த்தப்படும்.

இந்த கட்டண உயர்வு டிசம்பர் 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், புறநகர் ரயில் கட்டணம் மற்றும் மாதாந்திர சீசன் கட்டணம் ஆகியவற்றில் மாற்றம் இல்லை. அதேபோல, சாதாரண ரயில்களில் 215 கி.மீ. தூரம் வரை பயணிப்பவர்களுக்கும் கட்டண உயர்வு இல்லை.

இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாவது: "ரயில் கட்டண உயர்வு பயணிகளுக்கு சிறிய அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக ஏ.சி. பெட்டியில் 500 கி.மீ. தூரம் பயணம் செய்வோருக்கான கட்டணம் ரூ.10 மட்டுமே அதிகரிக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே நெட்வொர்க் மற்றும் செயல்பாடுகள் கணிசமாக விரிவடைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு மூலம் ரயில்வே துறைக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

அதிகரித்து வரும் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பணியாளர்கள் எண்ணிக்கையை ரயில்வே அதிகரித்துள்ளது. இதனால், சம்பளச் செலவு ரூ.1.15 லட்சம் கோடியாகவும், ஓய்வூதியச் செலவு ரூ.60,000 கோடியாகவும் உயர்ந்துள்ளது. 2024-25 நிதி ஆண்டில் ரயில்வேயின் மொத்த செயல்பாட்டுச் செலவு ரூ.2.63 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

அதிகரித்து வரும் செலவுகளைச் சமாளிக்க, சரக்கு போக்குவரத்து வருவாயை அதிகரிப்பதிலும், குறிப்பிட்ட அளவிலான கட்டணச் சீரமைப்பை செயல்படுத்துவதிலும் ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது. பாதுகாப்பு மற்றும் செயல்திறனில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடுகளால், சரக்குப் போக்குவரத்தில் உலகின் 2-வது மிகப்பெரிய ரயில்வே அமைப்பாக இந்தியா உருவெடுத்துள்ளது." இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிச. 26 முதல் ரயில் கட்டணம் உயர்கிறது: புறநகர் ரயில், சீசன் கட்டணத்தில் மாற்றம் இல்லை
மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in