

கோப்புப் படம்
புதுடெல்லி: டெல்லியில் தொடரும் போராட்டத்தால் வியாபாரிகளுக்கு இதுவரை ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தீபாவளிக்குள் இது ரூ.10,000 கோடியாக உயர வாய்ப்பிருப்பதாகவும் சேம்பர் ஆப் டிரேடர்ஸ் அண்ட் இண்டஸ்டிரி (சிடிஐ) தெரிவித்துள்ளது.
மத்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்கள் டெல்லி போக்குவரத்துகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் போராட்டங்கள், தலைநகரின் வணிகச் சூழலை பாதித்து வருகிறது. இந்நிலையில், போராட்டங்கள் காரணமாக டெல்லி வியாபாரிகளுக்கு ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தீபாவளிக்குள் இது ரூ.10,000 கோடியை எட்டக்கூடும் என்றும் சிடிஐ மதிப்பிட்டுள்ளது.
இது குறித்து சிடிஐ தலைவர் பிரிஜேஷ் கோயக் கூறுகையில், ’அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தால் மட்டும் சுமார் ரூ.2,000 கோடி வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 13 முதல் 16 ஆம் தேதி வரை கூடுதலாக சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய டெல்லியில் மேற்கொள்ளப்பட்ட சாலை மறியல்கள், சில பகுதிகளின் போக்குவரத்து சிக்கல்கள், மெட்ரோ சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்டவையே இதற்குக் காரணம்.
இந்த போராட்டங்களால் டெல்லியின் சில்லறை வணிகச் சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சதர் பஜார், சாந்தினி சவுக், காஷ்மீரி கேட், சாவ்ரி பஜார், பகீரத் பிளேஸ், காந்தி நகர், நயா பஜார், காரி பாவ்லி, கராவல் நகர், கரோல் பாக், லஜ்பத் ராய் மார்க்கெட் மற்றும் கன்னாட் பிளேஸ் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன.’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த இழப்பு தொடர்பாக சிஐடி மேலும் ஒரு புள்ளிவிவரத்தையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, சில்லறை வணிகம் ரூ. 1,800 கோடி, மொத்த வணிகம் மற்றும் வெளியூர் வாங்குபவர்கள் ரூ.600 கோடி, உணவு, தங்குமிடம் மற்றும் சேவைத் துறையில் ரூ.300 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து, ஆட்டோ-டாக்ஸி மற்றும் சுற்றுலாவில் ரூ.180 கோடியும், முறைசாரா துறை, தினக்கூலித் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் சுமை தூக்கும் பணிகளில் ரூ.120 கோடியும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டச் சூழலால் ஹோட்டல்கள், உணவகங்கள், திரையரங்குகள், அழகு நிலையங்கள், சலூன்கள், உடற்பயிற்சி கூடங்கள், கிளப்புகள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சிடிஐ தெரிவித்துள்ளது.
தீபாவளி வரை இத்தகைய போராட்டங்கள் தொடர்ந்தால், வணிக இழப்பு ரூ.10,000 கோடியைத் தாண்டக்கூடும் என்றும் சிஐடி எச்சரித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் வணிகம் தடையின்றி நடைபெற சிஐடி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளது.
இதில், வர்த்தகர்களுக்கு நிவாரணம் கிடைக்கவும், தீபாவளி முடியும் வரை மத்திய டெல்லி, புது தில்லி மற்றும் லுட்டியன்ஸ் மண்டலம் ஆகிய பகுதிகளில் போராட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் சிஐடி கோரிக்கை விடுத்துள்ளது