‘‘அரசின் வர்த்தக ஒப்பந்தங்கள் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குகின்றன’’ - பிரதமர் மோடி

‘‘அரசின் வர்த்தக ஒப்பந்தங்கள் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குகின்றன’’ - பிரதமர் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: திறமையான இளைஞர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாய்ப்புகளை வழங்கும் வகையில் மத்திய அரசு, பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் இடப்பெயர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

18வது வேலைவாய்ப்புத் திருவிழாவின் கீழ் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 61,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், காணொலிக்காட்சி மூலம் பங்கேற்று நியமனக் கடிதங்களை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் அவர்களுக்காக உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: ‘‘உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் இடப்பெயர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.

நாட்டின் பொருளாதாரம் தற்போது வலுவடைந்திருக்கிறது. பத்தாண்டுகளுக்குள் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) இரட்டிப்பாக்கிய உலகின் ஒரே பொருளாதாரம் இந்தியாதான். இன்று, 100-க்கும் மேற்பட்ட நாடுகள் அந்நிய நேரடி முதலீடு (FDI) மூலம் இந்தியாவில் முதலீடு செய்கின்றன. 2014-க்கு முந்தைய பத்தாண்டுகளுடன் ஒப்பிடும்போது அந்நிய நேரடி முதலீட்டு வரவு 2.5 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த அந்நிய முதலீட்டின் வரவு, இளைஞர்களுக்கு எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

'ஜன கண மன' பாடலை தேசிய கீதமாகவும், 'வந்தே மாதரம்' பாடலை தேசியப் பாடலாகவும் அரசியல் சாசனம் அங்கீகரித்த நாள் ஜனவரி 24. வேலைவாய்ப்புத் திருவிழா (ரோஜ்கர் மேளா) ஒரு நிறுவனமாக மாறியுள்ளது. இதுவரை லட்சக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் இருந்து பணி நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர்.

இன்று விநியோகிக்கப்பட்ட பணி நியமனக் கடிதங்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக உங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பு. வளர்ந்த இந்தியாவை நோக்கி இளைஞர்களை வழிநடத்துவதற்கான ஒரு சங்கல்ப பத்திரம்’’ இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

ரோஜ்கர் மேளா தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை நாடு முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான வேலை நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. 18-வது வேலைவாய்ப்புத் திருவிழா நாடு முழுவதும் 45 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டு, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இவர்கள், மத்திய உள்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, நிதிச் சேவைகள் துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணியில் சேர உள்ளனர்.

‘‘அரசின் வர்த்தக ஒப்பந்தங்கள் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குகின்றன’’ - பிரதமர் மோடி
“அதிகார வெறிபிடித்த சதிகாரர் முகம்மது யூனுஸ்” - ஷேக் ஹசீனா கடும் தாக்கு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in