புதுடெல்லி: அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள லிச்சென்ஸ்டைன் நாட்டின் இளவரசர் அலாய்ஸ், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
லிச்சென்ஸ்டைன் அரசின் தலைவரான இளவரசர் அலாய்ஸ், நேற்று வதோதராவில் இருந்து டெல்லி வந்தடைந்தார். அவரை மத்திய அமைச்சர் ஜெயந்த் சிங், விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றார். அவருடன் அவரது மனைவி இளவரசி சோஃபி, உயர்மட்ட அதிகாரிகள், முன்னணி தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்டோரும் இந்தியா வந்துள்ளனர்.
இன்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய அரச தம்பதியர், பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றனர். அங்கு அவர்களை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளவரசர் அலாய்ஸ், “லிச்சென்ஸ்டைனில் இருந்து இந்தியாவுக்கு மேற்கொள்ளப்படும் முதல் அரசுமுறைப் பயணம் இது. இந்தியா உடனான உறவுக்கு லிச்சென்ஸ்டைன் அளிக்கும் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது. இந்த அற்புதமான நாட்டுக்கு மேற்கொள்ளப்படும் முதல் அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
2025-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்திய - ஐரோப்பிய தடையில்லா வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம், ஒரு முக்கிய மைல்கல். இந்த வேகத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று, இந்தியா உடனான உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, அலாய்ஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் வர்த்தகம் - முதலீடு, அறிவியல் - தொழில்நுட்பம், புத்தாக்கம், மக்கள் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இளவரசர் அலாய்ஸ், இன்று மாலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்திக்க உள்ளார். அப்போது, இளவரசர் மற்றும் அவருடன் வருகை தந்துள்ள உயர்மட்ட விருந்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் விருந்து அளிக்க உள்ளார்.