

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸின் அதிருப்தியாளர் தரப்பு அளித்த புகாரின் பேரில், இந்தியன் வங்கியில் உள்ள அக்கட்சியின் 4 கணக்குகளை மேற்கு வங்க காவல் துறை முடக்கியது.
இதனை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, ஆனால், உயர்நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைக்காததால், மம்தா பானர்ஜி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வராலே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பபோது, மம்தா பானர்ஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “கட்சியின் அன்றாட செயல்பாடுகளை முடக்கும் நோக்கில் காவல்துறை செயல்படுகிறது.
திரிணமூல் கட்சி கணக்குகளில் உள்ள பணம் அன்றாட கட்சிப் பணிகளுக்கானது. தற்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாதத்துக்கு குறைந்தபட்சம் ரூ.12.15 கோடி தேவை். வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் கட்சியின் இயக்கம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.
மேற்கு வங்க காவல் துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இவ்வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை மற்றும் நிதி முறைகேடுகள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. கட்சியின் உதவியாளர் ஒருவர் மூலம் ரூ.35 கோடி ரொக்கமாக செலுத்தப்பட்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தகுதிக்குள் செல்ல விரும்பவில்லை, எங்கள் அதிகார வரம்பையும் பயன்படுத்த விரும்பவில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதேவேளை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுபடுத்தி முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.