ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மஹூவா மொய்த்ரா
புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்தளிக்கும் ஐ-பேக் நிறுவனத்தின் கொல்கத்தா அலுவலகம், கொல்கத்தாவில் உள்ள அதன் இயக்குநர் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு அக்கட்சியின் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியின் எம்பிக்களான டெரெக் ஓபிரேன், சதாப்தி ராய், மஹூவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் உள்ளிட்டோர், டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தை முற்றுகையிட்டு அமித் ஷாவுக்கு எதிராகவும், அமலாக்கத் துறைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இவர்களின் ஆர்ப்பாட்டத்தை அடுத்து அமித் ஷா அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. டிஎம்சி எம்பிக்கள் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முயன்றபோது அவர்களை டெல்லி போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மஹூவா மொய்த்ரா, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை டெல்லி போலீஸார் எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அமலாக்கத் துறை சோதனை நடத்தப்படுகிறது. தேர்தலில் நாங்கள் நிச்சயம் பாஜகவை தோற்கடிப்போம் என தெரிவித்தார்.
சதாப்தி ராய் பேசும்போது, அவர்கள் அமலாக்கத் துறையை நேற்று அனுப்பினார்கள். தேர்தல் நெருங்கும்போதுதான் இவர்களுக்கு ஒவ்வொன்றும் நினைவுக்கு வருமா? தேர்தல் காலம் என்பதால், அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவற்றை அவர்கள் அனுப்புகிறார்கள். ஆனால், தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என கூறினார்.
பின்னணி என்ன?: மேற்கு வங்க மாநிலத்தில் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கத்தில் இருந்து சட்டவிரோதமாக நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2020-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
குறிப்பாக இந்த முறைகேட்டில் பயனடைந்ததாக சந்தேகிக்கப்படுபவரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினருமான திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்தச் சூழலில், கொல்கத்தாவின் சால்ட்லேக் பகுதியில் உள்ள, அரசியல் ஆலோசனை வழங்கும் ஐ-பேக் நிறுவன அலுவலகம் மற்றும் அதன் இயக்குநர் பிரதிக் ஜெயின் வீடு மற்றும் டெல்லியில் உள்ள 4 இடங்கள் உட்பட மொத்தம் 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தினர்.
மம்தா பானர்ஜி புகார்: அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கொல்கத்தாவின் லோடன் தெருவில் உள்ள பிரதிக் ஜெயினின் வீட்டுக்கு போலீஸாருடன் சென்ற டிஎம்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறையினரிடம் இருந்து கைப்பற்றினார். பின்னர் வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘அமலாக்கத் துறையினரின் இந்த சோதனை நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது; அரசியலமைப்புக்கு எதிரானது.
அவர்கள் எங்கள் கட்சியின் ஆவணங்களையும் சட்டமன்றத் தேர்தலுக்கான எங்கள் வேட்பாளர்களைப் பற்றிய விவரங்களையும் கொண்ட ஹார்ட் டிஸ்குகளை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர். நான் அவற்றை அவர்களிடம் இருந்து மீட்டுக் கொண்டு வந்தேன். அரசியல் கட்சியின் தரவுகளைச் சேகரிப்பது அமலாக்கத் துறையின் கடமையா?. இதற்கும், நிதி முறைகேடு தொடர்பான விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. உள்துறை அமைச்சர் நாட்டை பாதுகாப்பவரைப் போல அல்லாமல், மிகவும் மோசமான அமைச்சரைப் போல நடந்து கொள்கிறார்’’ என குற்றம் சாட்டினார்.
பாஜக குற்றச்சாட்டு: அமலாக்கத்துறையின் விசாரணையில் மம்தா பானர்ஜி தலையிட்டுள்ளதாகவும் இது சட்டத்துக்கு விரோதமான செயல் என்றும் பாஜக மூத்த தலைவரும் மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, ‘‘அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ளும் இடத்துக்குள் முதல்வர் மற்றும் கொல்கத்தா காவல் ஆணையர் வருவது நெறிமுறையற்றது. இது அரசியலமைப்புக்கு விரோதமானது. மத்திய அமைப்பின் விசாரணையில் நேரடியாக தலையிடும் முயற்சி இது’’ என குற்றம் சாட்டினார்.
மம்தா மீது புகார்: இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில், “பிரதீக் ஜெயின் வீட்டில் சோதனை நடத்தியபோது, அங்கு தனது உதவியாளர்களுடன் வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, சில ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை எடுத்துச் சென்றார். இதுபோல, சால்ட்லேக் பகுதியில் உள்ள ஐ-பேக் அலுவலகத்துக்கு தனது உதவியாளர்களுடன் வந்த மம்தா, அங்கிருந்த சில ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை எடுத்துச் சென்றார்” என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் கட்சிக்கு ஐ-பேக் நிறுவனம் வியூகம் அமைத்துக் கொடுத்தது. அத்துடன் கட்சியின் தகவல் தொழில்நுட்ப மற்றும் ஊடக செயல்பாடுகளை கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.