திரிணமூல் காங்கிரஸ் மூத்த எம்.பி கல்யாண் பானர்ஜி மீது தாக்குதல்

காவல் நிலையத்துக்கு அருகே வன்முறை
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கல்யாண் பானர்ஜி

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கல்யாண் பானர்ஜி

Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஹூக்லி மாவட்டத்தில் உள்ள சாண்டிதலா காவல் நிலையத்துக்கு வெளியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கல்யாண் பானர்ஜி தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் அவர் தலையில் காயமடைந்தார்.

கைது செய்யப்பட்ட தங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை விடுவிக்கக் கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மனு அளிக்க இன்று (மே 31) கல்யாண் பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். அப்போது அங்கு பாஜக-வினரும் வந்துள்ளனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் கல்யாண் பானர்ஜி தாக்கப்பட்டார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அங்கு திரண்ட பாஜக-வினர் கோஷமிட்டுள்ளனர். அப்போது “திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் திருடர்கள்” எனக் கூறியுள்ளனர். அதையடுத்துதான் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல். கள சூழலை கட்டுக்குள் வைக்க காவலர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து தங்கள் மீதான இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார் கல்யாண் பானர்ஜி. அப்போது தனது தலையில் ஈரமான கைக்குட்டையை அவர் அழுத்தி பிடித்திருந்தார். அவர் கூறியது: எங்கள் மீதான தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. நாங்கள் காவல் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தோம். அப்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அறவழிப் போராட்டம் என்ற ஜனநாயக ரீதியான எங்கள் உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்றார்.

நேற்று (சனிக்கிழமை) மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை சந்திப்பதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி சோனார்பூர் பகுதிக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் மீது கற்களும் முட்டைகளும் வீசி தாக்கப்பட்டார்.

அப்போது ஹெல்மெட் அணிந்திருந்த அவரை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தின் போது, பாஜக தொண்டர்கள் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக ‘சோர் சோர்’ (திருடன் திருடன்) என முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.பி-யான கல்யாண் பானர்ஜி மீது தாக்குதல் நடந்துள்ளது.

நடந்த முடிந்த மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. இதையடுத்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. ஒரே நேரத்தில் கவுன்சிலர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகினர். இந்நிலையில், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.

<div class="paragraphs"><p>திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கல்யாண் பானர்ஜி</p></div>
“50 திரிணமூல் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய தயார்” - எம்.பி சவுமித்ரா கான் பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in