

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 எம்எல்ஏ-க்கள் மற்றும் 20 எம்.பி-க்கள் பாஜகவில் இணைய தயாராக உள்ளதாக பாஜக மக்களவை உறுப்பினர் சவுமித்ரா கான் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. அண்மையில் முடிந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 208 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் - 2, மார்க்சிஸ்ட் - 1, ஏஜேயுபி - 2, ஏஐஎஸ்எப் - 1 இடத்திலும் வெற்றி பெற்றது.
மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு உள்ளாட்சி அமைப்புகளில் அங்கம் வகித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுமார் நூறு கவுன்சிலர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகி உள்ளனர். இதன் மூலம் பாஜக உள்ளாட்சி அமைப்புகளிலும் பெரும்பான்மையுடன் பங்கெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதோடு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், முன்னாள் முதல்வர் மம்தாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அந்த கட்சிக்கு நெருக்கடியை இப்போது ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ-க்கள், எம்.பி-க்கள் தங்கள் கட்சியில் இணைய தயாராக இருப்பதாக பாஜக எம்.பி சவுமித்ரா கான் தெரிவித்துள்ளார்.
“எங்கள் கட்சியின் மத்திய தலைமை மட்டும் அனுமதி அளித்தால் திரிணமூல் காங்கிரஸ் என்ற கட்சியே இருக்காது.
அங்குள்ள அனைவரும் பாஜகவில் இணைய தயாராக உள்ளனர். அதிருப்தியில் உள்ள 50 சட்டப்பேரவை உறுப்பினர்கள், 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கு வர தயார்.
அபிஷேக் பானர்ஜி பாவம் செய்துள்ளார். அவரெல்லாம் சிறைக்கு செல்ல வேண்டும். அவர் வீட்டு முன் இப்போது புல்டோசர் நிற்கிறது. கடந்த 2021-ல் பாஜக உறுப்பினர்களின் வீடுகளை அவர் இடித்தார். அதனால் அவர் இதை எதிர்கொண்டுள்ளார். அவர் நரகத்துக்கு செல்ல வேண்டும்” என சவுமித்ரா கான் தெரிவித்துள்ளார்.