

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு
திருப்பதி: திருப்பதியில் நேற்று நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார். பின்னர் அவர் பேசியதாவது:
முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் உத்தரவின் பேரில், திருமலைக்கு வரும் ஒவ்வொரு பக்தரும் மன நிறைவோடு சுவாமியை தரிசித்து வீடு திரும்ப வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். ஜீயர்கள், ஆகம வல்லுநர்களின் வழிகாட்டுதலின் பேரில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மட்டுமின்றி, தேவஸ்தானத்தின் கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆகம சாஸ்திரங்கள் பின்பற்றப்படுகின்றன.
‘அன்னதானமே மகா தானம்’ என்பதற்கேற்ப பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் இலவச அன்னதானம் செய்து வருகிறது. விரைவில் திருமலையில் ரூ.120 கோடி செலவில் மற்றுமொரு அன்னதான மையம் கட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, தேவஸ்தான பாதுகாப்பு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை பி.ஆர். நாயுடு பார்வையிட்டார். சிறப்பாக பணியாற்றிய தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலருக்கு பதக்கங்கள், நற்சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். இதில் திருப்பதி தேவஸ்தான பள்ளி மாணவியரின் நடன நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.