

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள முண்டத்திக்கோடு பகுதியில் அமைந்துள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாக தகவல். இது கேரள மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வரும் 26-ம் தேதி உலக புகழ்பெற்ற திருச்சூர் பூரம் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் முண்டத்திக்கோடு பகுதியில் இந்த விழாவுக்கான பட்டாசு தயாரிப்பு பணிகள் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலத்தில் நடைபெற்றது. இந்த இடத்தில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் அங்கு அமைக்கப்பட்ட கிடங்கில் வைக்கப்பட்டன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்த காரணத்தால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதாகவும் தகவல். இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் அறிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய கேரள தலைமை செயலருக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மேலும், மருத்துவ வல்லுநர்களை வெளி மாநிலங்களில் இருந்தும் அழைத்து வர அரசு தயார் என அவர் கூறியுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை அவர் தெரிவித்துள்ளார்.