

மும்பை: மகாராஷ்டிராவைச் சேர்ந்த சமீர் நார்வேகர், அவரது மனைவி நேகா மற்றும் அமித் பலாவ் ஆகிய 3 பேரும் சேர்ந்து 2019ம் ஆண்டில் புனேவைத் தலைமையிடமாகக் கொண்டு ‘டிரேட் வித் ஜாஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி உள்ளனர்.
இந்நிறுவனம் அறிவித்த கவர்ச்சிகரமான திட்டத்தை நம்பி அம்மாநிலம் முழுவதிலும் இருந்து 1,500 காவல் துறை பணியாளர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் உட்பட 11,000-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். பங்குச் சந்தை வர்த்தகம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் மூலம் முதலீட்டாளர்களுக்கு மாதம் 4% லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி இக்கும்பல் முதலீடுகளை ஈர்த்துள்ளது. சுமார் ரூ.500 கோடி வரை பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், அந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டது. அத்துடன் அதன் உரிமையாளர்கள் தலைமறைவாயினர். பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பாக காவல் துறையில் புகார் செய்தனர். இந்த வழக்கு தானே காவல் துறையின் பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதன் அடிப்படையில், தலைமறைவாக இருந்த 3 பேரையும் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் இருந்த அவர்களை கடந்த வியாழக்கிழமை கைது செய்ததாக போலீஸார் நேற்று தெரிவித்தனர்.
தற்போது தானே பொருளாதார குற்றப்பிரிவினர் அவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.