

காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடா பஞ்சாயத்து ராஜ் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வந்த நூகராஜ், அவரது மனைவி மீனா, மகள் சவுஜன்யா, பேரன் ரியான்ஸ் ஆகிய 4 பேரும் கடந்த 16-ம் தேதி நள்ளிரவில் காக்கிநாடா கோதாவரி நதியில் குதித்தனர். இதில், ரியான்ஸ் மட்டுமே கரை ஒதுங்கி உயிர் பிழைத்த நிலையில் மற்ற மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக 2 கடிதங்கள் போலீஸாருக்கு கிடைத்தன. இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: ரியான்ஸுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து வந்த சாதிக் கான் என்பவர், கணவர் இல்லாத சவுஜன்யாவுடன் தகாத முறையில் நடந்துள்ளார்.
மேலும், சவுஜன்யாவை தன்னுடைய மதத்துக்கு மாறும்படி அடிக்கடி வலியுறுத்தி உள்ளார். இல்லையெனில் ரியான்ஸை கடத்திக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 16-ம் தேதி கோதாவரி நதியில் 4 பேரும் குதித்தனர். இதில் ரியான்ஸ் உயிர் தப்பினார். இதனை அறிந்ததும் தலைமறைவாக இருந்த சாதிக் கானை கைது செய்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீஸார் கூறினர்.