காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் இண்டியா கூட்டணி தலைவர்கள் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சென்னை: ‘தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்’ என்று இண்டியா கூட்டணித் தலைவர்கள் நேரில் வந்து வேண்டுகோள் விடுத்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதை நிராகரித்தார். இதனால் சோனியா, ராகுல், மம்தா உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் அதிர்ச்சியுடன் திரும்பி சென்றனர்.
தற்போது மக்களவையில் 543 இடங்கள் உள்ளன. தொகுதி மறுவரையறை மூலம் இந்த எண்ணிக்கையை 815 முதல் 850 வரை அதிகரிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது.
இந்த மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. கடந்த முறை போதிய ஆதரவு கிடைக்காததால் மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது பல்வேறு கட்சிகளின் ஆதரவைப் பெற்று மசோதாக்களை நிறைவேற்ற பாஜக முயற்சி செய்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த இண்டியா கூட்டணித் தலைவர்கள், முதலில் கனிமொழியைத் தொடர்பு கொண்டு மசோதாவுக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து, ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேச முடிவு செய்தனர்.
இதற்காக சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி.சதீசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.
பின்னர், ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலின் இல்லத்துக்கு மாலை 4.40 மணியளவில் சென்றனர். அங்கு ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, திருச்சி சிவா, தமிழச்சி தங்கபாண்டியன், சபரீசன் உள்ளிட்டோர் அவர்களை வரவேற்றனர்.
அப்போது, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக அளிக்கும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மசோதா நிறைவேற்றப்பட்டால் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் இண்டியா கூட்டணித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், திமுகவின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதால் தமிழக மக்களின் நலன் கருதி ஆதரவு அளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது கருத்துகளையும் கோரிக்கைகளையும் எடுத்துரைத்தனர். திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும், தொடக்கத்தில் இருந்தே நாங்கள் வலியுறுத்தி வந்த கோரிக்கைகள் புதிய மசோதாவில் இடம்பெற்றிருப்பது குறித்தும் அவர்களிடம் விளக்கினேன்.
தற்போது கொண்டுவரப்படும் மசோதா தோற்கடிக்கப்பட்டால் தமிழகத்துக்குக் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச பாதுகாப்பைக்கூட இழக்க நேரிடும். 2027 ஜனவரியில் அமைய உள்ள தொகுதி மறுவரையறை ஆணையத்தால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். அதைத் தடுக்கவோ தவிர்க்கவோ முடியாத நிலை ஏற்படும்.
1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பதிலாக அதற்குப் பிந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் விகிதாச்சாரம் குறையும்.
எனவே, தமிழகத்தின் அரசியல் வலிமையை அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பாதுகாக்கும் வகையில் இந்த மசோதாவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்க முடியாது. தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், மாநில உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவோம். அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் எங்களது நிலைப்பாடு ஒன்றுதான். அது தமிழகம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்டாலினுடன் நட்பான முறையில் சந்திப்பு நடைபெற்றது. தொகுதி மறுவரையறையுடன் மக்களவையின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தி, அந்தத் தொகுதிகளை பாஜக தனக்கு சாதகமாக மறுவடிவமைக்க முயற்சிப்பதாக அவரிடம் தெரிவித்தோம். இது இந்தியாவுக்கும், குறிப்பாக தென்னிந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அசாம், ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுவரையறையின் போது பாஜக இந்த நடைமுறையைச் சோதித்துப் பார்த்துள்ளது. அதே முறையை இந்தியா முழுவதும் செயல்படுத்த முயற்சிக்கிறது. பாஜகவின் திட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டோம்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழ் நாகரிகம், மொழி, கலாச்சாரத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. 850 இடங்களைக் கொண்ட மக்களவையை பாஜக தனக்கு சாதகமாக மறுவடிவமைத்தால் இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படும். இது ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஆபத்தானது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.