

கோரக்பூர்: உ.பி.யின் கோரக்பூரில் உள்ள மகாயோகி கோரக்நாத் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ஒரு விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று பேசியதாவது:
போதைப் பழக்கத்தில் சிக்கியுள்ள ஒரு இளைஞனால் தனது குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கான பொறுப்புகளை நிறைவேற்ற முடியாது. போதைப்பொருள் பயன்பாடும் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாவதும் நம் நாட்டு இளைஞர்களுக்கு இரு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இளைஞர்கள் தங்களின் எதிர்காலம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க இவை இரண்டில் இருந்தும் விலகியிருக்க வேண்டும்.
போதைப் பொருள் மாபியாக்கள் இளைஞர்களை குறி வைக்கின்றனர். எனவே, மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் கல்வி நிறுவனங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு, டிரோன்கள், ரோபோக்கள் என உலகம் புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.தொழில்நுட்பம், வேலைகளை குறைக்காது. மாறாக புதிய வாய்ப்புகளை உருவாக்கும், இளைஞர்கள் இந்த மாற்றத்துக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.