

புதுடெல்லி: இந்திய தூதரகத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்து, வங்கதேச தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தேசிய குடிமக்கள் கட்சியின் (என்சிபி) மூத்த தலைவர் ஹஸ்னத் அப்துல்லா, இந்தியாவின் 7 சகோதரிகளை (வடகிழக்கு மாநிலங்கள்) வங்கதேசத்துடன் இணைப்போம் என இரு தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
இந்நிலையில், வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சில தீவிரவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன.
இதையடுத்து, டெல்லியில் உள்ள வங்கதேச தூதர் ரியாஸ் ஹமிதுல்லாவுக்கு நேரில் வருமாறு சம்மன் அனுப்பப்பட்டது. நேரில் ஆஜரான அவரிடம் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து கவலை தெரிவித்ததுடன் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்பை இடைக்கால அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டாக்காவில் உள்ள இந்தியா விசா மையத்தை மத்திய அரசு நேற்று மூடியது.