

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
புதுடெல்லி: அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.
அணுசக்தி துறை மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. நாட்டில் அணு மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், இத்துறையில் தனியாருக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
இதற்காக ‘இந்தியாவின் மாற்றத்துக்கான அணுசக்தி மேம்பாட்டு (சாந்தி) மசோதா தயாரிக்கப்பட்டது. இதை அணு சக்தி துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாம் 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் அணு மின்சக்தி உற்பத்தி என்ற இலக்கை எட்ட வேண்டும். அதற்கு, இப்போது கொண்டுவரப்படும் அணுசக்தி மசோதா உதவும்.
அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் அணு சக்தி துறையை, தனியார் நிறுவனங்களுக்கு திறந்துவிட இந்த மசோதா வழிவகுக்கும் என்பதால் இது மிக முக்கியமான மசோதா. நாட்டின் வளர்ச்சி பயணத்துக்கு, இது புதிய வழியை காட்டும்.
நாட்டில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளுக்கு தீர்வு காணவும், மொத்த எரிசக்தியில், அணு மின்சாரத்தின் பங்கை 10 சதவீதமாக அதிகரிக்கவும் இந்த மசோதா அவசியம்.இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசினார்.
இந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி பேசுகையில், ‘‘இந்த மசோதாவில் அணுசக்தி சாதனங்களை விநியோகிக்கும் நிறுவனங்களின் பொறுப்பை நீக்கும் பிரிவு உள்ளது. இந்தப் பிரிவு, அணு உலை விபத்து ஏற்பட்டால் இந்தியாவுக்கு பாதகமாக அமையும். கதிர்வீச்சு கழிவுகளை கையாள்வது, யுரேனியம் அணு உலைகளுக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற திட்டங்கள் எதுவும் இந்த மசோதாவில் இல்லை’’ என்றார். இதையடுத்து இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.