

புதுடெல்லி: பிஹார் மற்றும் தெலங்கானாவில் நடத்தப்பட்டது போன்ற சாதிவாரி கணக்கெடுப்பை நாடு தழுவிய அளவில் நடத்த வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “சாதிவாரி கணக்கெடுப்பை சரியான முறையில் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கடந்த 3 மூன்று ஆண்டுகளாக மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக, ஆகஸ்ட் 20 அன்று காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக 21 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதினர். சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடிக்கு எழுதிய மூன்றாவது கடிதம் இது.
இதற்கு முன்பாக, 2023 ஏப்ரல் 16 அன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முதல் கடிதத்தை எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து, 2025 மே 5 அன்று கார்கே இரண்டாவது கடிதத்தை எழுதினார். இந்த கடிதங்களில் சில பரிந்துரைகள் சொல்லப்பட்டிருந்தன. ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்த இரண்டு கடிதங்களுக்கும் இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
2023 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தியபோது, “சாதிவாரி கணக்கெடுப்புக்கான காங்கிரஸின் கோரிக்கை 'நகர்ப்புற நக்சல்' மனப்பான்மையைக் காட்டுகிறது” என்று நரேந்திர மோடி கூறியிருந்தார். ஆனால், 2025 ஏப்ரல் 30 அன்று, 2027-ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மோடி அரசு அறிவித்தது.
இதற்குப் பிறகு சில நாட்களில், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான சில பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விவாதிக்க வேண்டும், மாநில அரசுகளுடன் கலந்துரையாடி பரிந்துரைகளைப் பெற வேண்டும், சமூக நீதியைக் கருத்தில் கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்வைத்து வருகிறது. ஆனால் மோடி அரசு இவ்விஷயத்தில் மவுனம் காத்து வருகிறது.
பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் இருந்தபோது அக்டோபர் 2, 2023 அன்று பிஹாரில் சாதி வாரியான கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதேபோல், பிப்ரவரி 4, 2025 அன்று தெலங்கானாவில் கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. பிஹார் மற்றும் தெலங்கானாவைப் போலவே நாடு முழுவதும் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். சில இடங்களில் மட்டுமே பணிகள் தொடங்கியுள்ளதால், இந்தச் செயல்முறையைச் சரிசெய்யப் பிரதமருக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது.
எனவே, தற்போதைய செயல்முறையை ரத்து செய்துவிட்டு, பிஹார் மற்றும் தெலங்கானா முறைகளைப் பின்பற்றி இந்தப் பணியைத் தொடங்க வேண்டும் என்று கார்கேவும் ராகுலும் வலியுறுத்துகின்றனர். அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இதில் இன்னும் மேம்பாடுகளைச் செய்ய முடியும். அரசு எங்கள் கடிதத்தைப் புறக்கணிக்காமல், முறையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.