“கேரளாவில் எல்டிஎஃப், பாஜக இடையே ரகசிய ஒப்பந்தம்” - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

“கேரளாவில் எல்டிஎஃப், பாஜக இடையே ரகசிய ஒப்பந்தம்” - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
Updated on
1 min read

கண்ணூர்: கேரளாவில் எல்டிஎஃப் - பாரதிய ஜனதா கட்சி இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.

கேரளாவின் பேராவூரில் நடந்த பிரச்சாரத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, "கேரள சட்டப்பேரவை தேர்தலில் எல்டிஎஃப், பாஜக இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சபரிமலையில் மிகப் பெரிய அளவிலான தங்கம் திருட்டு நடந்திருப்பதை நாம் பார்த்தோம். ஆனால், அது குறித்துப் பிரதமரிடமிருந்து ஒரு வார்த்தைகூட வரவில்லை.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக நான் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறேன். எனவே, நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் போராட்டங்களையும் நான் மிக நெருக்கமாகக் காண்கிறேன்.

உங்கள் பிள்ளைகளுக்குக் கல்வியை அளிப்பதற்காக நீங்கள் அனைவரும் எவ்வளவு கடுமையாகப் போராடி உழைக்கிறீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால், கேரளத்தில் நல்ல கல்வி கற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதில்லை. அப்படியே வேலை கிடைத்தாலும், அந்த வேலைகள் மாநிலத்துக்கு வெளியில்தான் அமைகின்றன” என்று குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில், இந்திரா காந்தி போல ஆடையணிந்து, கையில் ரோஜாவுடன் இருந்த சிறுமியை பிரியங்கா காந்தி மேடைக்கு அழைத்து, அவரின் செய்கையை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். இது அந்தப் பிரச்சார நிகழ்வில் ஒரு நெகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கியது.

2026 கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 9-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

“கேரளாவில் எல்டிஎஃப், பாஜக இடையே ரகசிய ஒப்பந்தம்” - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
“அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்” - பழனிசாமி நம்பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in