மைசூரு: காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் நலனை மாநில அரசு பாதுகாக்கும் என்று அம்மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
மைசூரில், இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரியங்க் கார்கே, “தமிழக அரசு தாங்கள் விரும்பும் எந்த ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றிக்கொள்ள அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. அவர்கள் என்ன தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் என்பது எங்கள் விஷயமல்ல. ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்களின் நலன்களுக்காகவே பணியாற்றுவார்கள் என்பது இயல்பானது. தமிழக அரசு தமிழக மக்களின் நலன்களுக்காக பணியாற்றுகிறது. நாங்கள் கர்நாடக மக்களின் நலன்களுக்காக பணியாற்றுகிறோம். இதில் எந்தத் தவறும் இல்லை.
நமது மாநிலத்தின் நலன்களைப் பாதுகாப்பதே எனது பொறுப்பு. அவர்கள் அவர்களது மாநிலத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. கடலில் வீணாக கலக்கும் கூடுதல் நீரை மட்டுமே கர்நாடக மக்களுக்காக, பெங்களூருக்காக நாம் சேமிக்க விரும்புகிறோம். நாம் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டோம்.
அவர்கள் சட்டப்போராட்டத்தைத் தொடரவோ அல்லது சட்ட ரீதியில் தீர்வைக் காணவோ விரும்பினால், அதைச் செய்ய அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. நாம் யாருடைய உரிமையையும் பறிக்க முயலவில்லை. தண்ணீர் தொடர்பான யாருடைய உரிமையையும் நாம் பறிக்க முயலவில்லை. உபரியாக வெளியேறும் நீரை மட்டுமே நாம் நமது மக்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முயல்கிறோம். சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதை அவர்களும் செய்யலாம்” என தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று (ஜூன் 18) செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், “மேகேதாட்டு திட்டம் எனது மனதுக்கு நெருக்கமானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் மிக முக்கியமானது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய நீர் எவ்வளவோ அந்த நீரை விடுவிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதற்கான உறுதிமொழியை தொடர்ந்து கடைப்பிடிப்போம்.
மேகேதாட்டு திட்டம் என்பது, நீர் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு சமநிலைப்படுத்தும் நீர்த்தேக்கத் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் நீரில் ஒரு டிஎம்சி நீரைக்கூட நாம் பாசனத்துக்காகப் பயன்படுத்த முடியாது. இதன் முதன்மை நோக்கம் குடிநீர் வழங்குவதே. குறிப்பாக, பெங்களூரு நகரில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த நகரத்துக்கு இந்த குடிநீர் மிகவும் அவசியம். கிருஷ்ணா நதியில் இருந்து நாம்மால் நீரைப் பெற முடியாது. காவிரி மட்டுமே நமக்குள்ள ஒரே நீர் ஆதாரம். ஒரு சமநிலைப்படுத்தும் நீர்த்தேக்கத்தை அமைப்பதன் மூலம் நீரை கூடுதல் திறனுடன் சேமித்து நிர்வகிக்க முடியும்” என தெரிவித்திருந்தார்.