

கோப்புப் படம்
‘தேசபக்தியும், சுய ஒழுக்கமும், சமூக சேவையுமே தேசத்தின் பலம்’ என்பதை தாரக மந்திரமாகக் வைத்து தொடங்கப்பட்ட ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (RSS), தமது 101-வது ஆண்டு பயணத்தில் எட்டியுள்ள உயரம் மகத்தானது.
‘இந்துக்களுக்கான அமைப்பு’ என்ற தொடக்க கால பிம்பங்களை உடைத்து, பேரிடரில் முதல் கரமாய் நீண்டு, சாதிப் பாகுபாடுகளைக் கடந்து, இன்று பிற மதத்தினருடனும் கைகோத்து நிற்கும் ‘அனைவருக்குமான இயக்கம்’ என்ற புதிய பரிணாமத்தை அடைந்துள்ளதாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பெருமிதம் கொள்கின்றனர்.
1925-இல் நாக்பூரின் ஒரு சிறிய மைதானத்தில் விதைக்கப்பட்ட விதை, இன்று ஒரு பிரம்மாண்ட ஆலமரமாக நிமிர்ந்து நிற்கிறது. 1925-ம் ஆண்டு விஜயதசமியன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் என்பவரால் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டது.
கடந்த வந்த சவால்களும் பிம்பங்களும்
ஆர்எஸ்எஸ் என்றாலே குறிப்பிட்ட கலாச்சார எல்லைக்குள் இயங்கும் அமைப்பு, மதவாத அமைப்பு என்ற பிம்பம் பரவலாக மதச்சார்பற்றவர்களிடமும் சிறுபான்மையினரிடமும் இருக்கிறது. இதனால் கடந்த ஒரு நூற்றாண்டில் இந்த அமைப்பு சந்தித்த சவால்கள் ஏராளம்.
நாட்டின் பேரிடர் காலங்களில், குறிப்பாக வெள்ளப் பெருக்கு, நிலநடுக்கம் போன்ற தேசியப் பேரிடர்களின் போது சாதி, மத எல்லைகளைக் கடந்து ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் முதல் ஆளாகக் களப்பணி ஆற்றியுள்ளனர். மக்களின் பார்வையில் நேர்மறையான மாற்றத்தைக் கடந்த கால் நூற்றாண்டுகளில் ஆர்எஸ்எஸ் ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் நிதர்சனம் என்கின்றனர் அந்த அமைப்பினர்.
இன்று நாட்டின் மிக முக்கியமான சமூக - அரசியல் சக்திகளில் ஒன்றாக ஆர்எஸ்எஸ் வளர்ந்துள்ளது. தற்போது 55,683 இடங்களில் 88,949 தினசரி ‘சாகா’க்களை நடத்தி வருகிறது.
கல்வி, சுகாதாரம், பழங்குடியினர் மேம்பாடு மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காக அந்த அமைப்பு மேற்கொண்டு வரும் கட்டமைப்பு சார்ந்த பணிகளும் மறுக்க முடியாதவை. 100 ஆண்டுகளில் 3 முறை ஆர்எஸ்எஸ் தடைக் காலங்களைச் சந்தித்துள்ளது. பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அதைக் கடந்து, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு தேசிய இயக்கமாக மாறியுள்ளதா என்ற விவாதம் இன்றும் பொதுவெளியில் இருக்கிறது.
தொடக்கமும் நோக்கமும்
பால கங்காதர திலகரின் ஆதரவாளராகவும், பி.எஸ்.மூஞ்சேயின் அரசியல் சீடராகவும் ஹெட்கேவார் இருந்தார். பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சிக் குழுவான ‘அனுசீலன் சமிதி’யில் உறுப்பினராகச் சேர்ந்து, அதனுடன் ஹெட்கேவார் ஐக்கியமானார். இந்த அமைப்பின் ரகசியச் செயல்பாட்டு முறைகளைத்தான், பிற்காலத்தில் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கப் பயன்படுத்தினார்.
விநாயக் தாமோதர் சாவர்க்கர் எழுதிய ‘எசென்ஷியல்ஸ் ஆஃப் இந்துத்வா’ நூலைப் படித்தபின் ஹெட்கேவார் மிகுந்த ஈர்ப்பு கொண்டார். 1925-ம் ஆண்டு ரத்னகிரி சிறையில் சாவர்க்கரை நேரில் சந்தித்துவிட்டு வந்தபின், இந்து சமூகத்தை ‘வலிமைப்படுத்தும்’ நோக்கத்துடன் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நிறுவினார்.
ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது இந்திய சமூகம் பிரிந்து கிடந்ததாகவும், சுய ஒழுக்கமும் ஒற்றுமையும் இன்றி இருந்ததாகவும் ஹெட்கேவார் கருதினார். பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், இந்தியர்களுக்கு (குறிப்பாக இந்துக்களுக்கு) உடற்பயிற்சி, மன உறுதி, தேசபக்தி மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பயிற்றுவித்து, ஒரு வலிமையான தேசியச் சமூகத்தை உருவாக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
ஹெட்கேவாரின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு ‘சாகா’ (Shakha) ஆகும். இது உடற்பயிற்சிகள், அணிவகுப்புகள், சித்தாந்த வகுப்புகள் மற்றும் கூட்டுச் செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு வழக்கமான பயிற்சியாகும்.
சுதந்திரப் போராட்டம், கடினமான காலங்கள்
ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது தொடக்க ஆண்டுகளில் சுதந்திரப் போராட்டத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்றவாதிகளின் குற்றச்சாட்டாக இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு, நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின், ஆர்.எஸ்.எஸ்- அமைப்புக்கு அந்தக் கொலையுடன் மறைமுகத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பின், அந்த அமைப்பு தடை செய்யப்பட்டு, பின்னர் குற்றமற்றது என விடுவிக்கப்பட்டாலும், அது அமைப்புக்கு ஆறாத வடுவை ஏற்படுத்தியது.
1975-ம் ஆண்டு அவசரநிலைக் காலத்திலும், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும், 2002-ல் நடந்த குஜராத் கலவரங்களின்போதும் மதக் கலவரங்களைத் தூண்டுவதில் உடந்தையாக இருந்ததாக ஆர்.எஸ்.எஸ். மீது குற்றச்சாட்டுகள் எழுந்து தடைகளும் விதிக்கப்பட்டன.
சமூகப் பணிகளும், மாறும் பரிமாணமும்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சகிப்புத்தன்மையற்ற மதவாத அமைப்பாக மட்டும் சுருக்குவது, அதன் பரந்த மற்றும் பன்முக சமூகப் பங்களிப்பைப் புறக்கணிப்பதாகும். பிரிவினைக் கலவரங்களின்போது அகதிகளைப் பாதுகாப்பதிலும் மறுவாழ்வளிப்பதிலும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முக்கியப் பங்காற்றினர் என்பது அந்த அமைப்பினரின் அழுத்தமான வாதம்.
வித்யா பாரதி பள்ளிகள் மற்றும் ஏகல் வித்யாலயா மூலமான அதன் கல்வி முயற்சிகள், பழங்குடியினருக்கு எழுத்தறிவு ஊட்டுதல், சுகாதார முகாம்கள் மற்றும் இரத்த தான முகாம்கள் அமைத்துச் சேவை செய்தல் ஆகியவை பாராட்டைப் பெற்றுள்ளன.
கால் நூற்றாண்டுகளில் ஆர்எஸ்எஸ் மீதான பார்வை மக்கள் மத்தியில் மாறியுள்ளது. அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தின் கீழ், ஆர்.எஸ்.எஸ். குறிப்பிடத்தக்க மென்மையான தொனியைக் கடைப்பிடித்து, இந்தியாவில் இஸ்லாம் மதத்தின் இடத்தைப் பகிரங்கமாக உறுதி செய்தது. “இஸ்லாம் இந்தியாவுக்கு வந்தது, இந்தியாவிலேயே நிலைத்திருக்கும்” என்ற அவரின் பேச்சு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது.
அதுமட்டுமின்றி, அதிதீவிர மதவாதிகளை எச்சரிக்கும் விதமாக, “ஒவ்வொரு மசூதியின் கீழும் சிவலிங்கத்தைத் தேடுவதை நிறுத்துங்கள்” என்று அவர் வலியுறுத்தியது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
குறிப்பாக கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அமெரிக்கா சென்றிருந்தபோது பேசுகையில், “முஸ்லிம்களை விலக்கிவைப்பது இந்தியாவுக்கு முரணானது” எனத் தெரிவித்தார்.
‘இந்து ராஷ்டிரம்’ என்ற சொல்லாடலைத் தணித்து, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நாகரிக நெறியாக அது இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் வலியுறுத்துகிறது. மோகன் பாகவத்தின் பேச்சு என்பது இந்துத்துவாவை அனைவரும் ஏற்க வைக்க வேண்டும் என்ற தந்திரம் மிகுந்த பேச்சு என்று காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்றவர்கள் விமர்சிக்கின்றனர்.
அடுத்த தலைமுறையின் பார்வை
‘இந்தியாவில் உள்ள 35 வயதுக்குட்பட்ட பெரும்பான்மையான இளைஞர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்களை வைத்து அதனை மதிப்பிடுவார்கள். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் மிதமான பேச்சு ஒருபுறம் இருக்க, இந்துத்துவாவின் பெயரில் வன்முறையிலும் காழ்ப்புணர்ச்சியிலும் சிலர் ஈடுபடுகிறார்கள்.
மோகன் பாகவத்தின் பேச்சு உண்மையானவை என்றால், அவை நடைமுறைப்படுத்தப்படுவதை இந்தத் தலைமுறையினர் எதிர்பார்க்கிறார்கள். இல்லாவிட்டால் இளைஞர்கள் தங்களது சொந்த முடிவுகளுக்கு வரக்கூடும். இந்தியாவின் இளைஞர்களின் நற்பண்புகளைச் செதுக்குவதில் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஓர் இயக்கம், தனது இரண்டாவது நூற்றாண்டைத் தீர்மானிக்கப்போகும் இளைய தலைமுறையிடம் நம்பகத்தன்மையை இழக்க நேரிடும்’ என்கின்றனர் சமூக - அரசியல் நோக்கர்கள்.