

புதுடெல்லி: அங்கன்வாடி பணியாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய சோனியா காந்தி, ‘‘அரசு அங்கீகாரம் பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் (ஆஷா பணியளர்கள்), அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணியாற்றும் சமூக நலப் பணியாளர்கள் ஆகியோரின் வாழ்க்கை துயரமான நிலையிலேயே இருந்து வருகிறது. இந்த திட்டங்கள் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான வழிகளாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், இந்த பெண் பணியாளர்கள் அதிக பணிச்சுமையுடனும் குறைந்த ஊதியத்துடனும் பணியாற்றி வருகிறார்கள்.
நாடு முழுவதும் ஆஷா பணியாளர்கள், நோய்த்தடுப்பு, மகளிர் சுகாதாரம், குடும்ப நலம் சார்ந்த பணிகளை மேற்கொள்கிறார்கள். குறைந்த மதிப்பூதியத்துடனும் வரையறுக்கப்பட்ட சமூகப் பாதுகாப்புடனும் தன்னார்வளர்களாகவே அவர்கள் உள்ளனர். இதேபோல், அங்கன்வாடிப் பணியாளர்களுக்கும் மதிப்பூதியமாக மத்திய அரசால் ரூ. 4,500 மற்றும் ரூ. 2,250 மட்டுமே வழங்கப்படுகிறது.
குறைந்த ஊதியம் ஒருபுறம் இருக்க, இதில் மூன்று லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. 2011-க்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால், அவை மக்கள் தொகை விதிமுறைகளுக்கு குறைவாகவே உள்ளன.
எனவே, இந்த பணியாளர்களின் நலன் கருதி மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, தற்போதுள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், அனைத்துப் பணியாளர்களுக்கும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும், முன்களப் பணியாளர் ஊதியத்துக்கான மத்திய அரசின் பங்களிப்பை இரட்டிப்பாக்க வேண்டும், 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் கூடுதலாக ஒரு ஆஷா பணியாளரை நியமிக்க வேண்டும், தற்போதுள்ள ஊட்டச்சத்து மற்றும் சுகாதார முயற்சிகளுடன் ஆரம்பகால குழந்தைப் பருவ கல்வியை வழங்குவதற்காக அங்கன்வாடி பணியாளர்களின் எண்ணிக்கையை இருமடங்காக்க வேண்டும்.
இந்த பணியாளர் படையை வலுப்படுத்துவதும், விரிவுபடுத்துவதும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதும் இந்தியாவின் எதிர்காலத்துக்கான ஒரு முதலீடு என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.