

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர், விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஜன.15 வரை திருத்தங்களைக் கோர அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் விவரங்களை சரிபார்த்து பதிவு செய்வதற்கான பணிகள் முடிந்துள்ள நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட உள்ளது. அதற்கு முன்பாக, நீக்கப்பட்ட பெயர்கள் குறித்த விவரங்கள் ceowestbengal.wb.gov.in/asd_sir என்ற இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.
அதில், 58 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் இல்லாதது, நிரந்தரமாக இடம் மாறியது, இறந்துவிட்டது அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்தது போன்ற காரணங்களால் இந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில், யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இன்று (டிச. 16, 2025) முதல் அடுத்த மாதம் 15 வரை (ஜன. 15, 2026) படிவம் 6 உடன் உறுதிமொழிப்படிவம் மற்றும் துணை ஆவணங்களை இணைத்து தங்கள் பெயர்களை சேர்க்கக் கோரலாம் என தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.