வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலக கார்கே வலியுறுத்தல்

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலக கார்கே வலியுறுத்தல்
Updated on
2 min read

புதுடெல்லி: வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நீட் மறுதேர்வு விவகாரத்தில் தற்காலிகமாக டெலிகிராம் செயலியை மோடி அரசு முடக்கியுள்ளது. உண்மையில் மோடி முதலில் கோர வேண்டியது, லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை முடக்கிய தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத்தான்.

இந்திய விமானப் படையை ஈடுபடுத்துதல், டெலிகிராம் செயலியை முடக்குதல் அல்லது வினாத்தாள் கசிவு மாபியாவை காப்பாற்ற சிறிய குற்றவாளிகளை மட்டும் பிடித்தல் போன்ற செயல்களை மோடி அரசு செய்வதற்குக் காரணம், கடந்த 10 ஆண்டுகளில் 90 முறை வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்திருப்பதுதான். இந்த மோசடியாலும் ஊழலாலும் 9 கோடி இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் தனது தோல்விகளை மூடி மறைக்கப் போகிறது?

வினாத்தாள் கசிவு காரணமாக அரை டஜன் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். ஆனால், அதுபற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பல ஆண்டுகளாகத் தேர்வுக்காக தங்கள் பிள்ளைகளை தயார்படுத்த கடன் வாங்கிய பெற்றோர் பலர் உள்ளனர். ஆனால், NEET, SSC, UGC-NET, CUET, பிற தேர்வுகள் என ஒவ்வொன்றிலும் வினாத்தாள்கள் ஒன்றன் பின் ஒன்றாக கசிந்துள்ளன.

நிலைமை எந்த அளவுக்கு மோசமாகி உள்ளது என்றால், UPSC தேர்வு முடிவுகளில் நடந்த பெரும் மோசடிகளை 17-18 வயதுடைய திறமையான மாணவர்களே வெளிச்சத்துக்குக் கொண்டு அளவுக்கு சூழல் உள்ளது. இப்போது, நம்பகத்தன்மையின் உச்சமாகக் கருதப்பட்ட UPSC தேர்வும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளது.

நாட்டின் விழிப்புணர்வு உள்ள இளைஞர்கள் ஒரே விஷயத்தைத்தான் கோருகிறார்கள். அது தர்மேந்திர பிரதானின் ராஜினாமா. பொறுப்புக் கூறலுக்கான முதல் சோதனை இதுவே. துரதிருஷ்டவசமாக இந்த சோதனையில் பாஜக முழுமையாக தோல்வி அடைந்துள்ளது” என விமர்சித்துள்ளார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “பொதுமக்களின் நலனில் அக்கறையும் பொறுப்பும் உள்ள நாம் அனைவரும் மாணவர்களுடன் துணை நிற்க வேண்டும். அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் துயரங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தேர்வுக்கு முன்பும் வினாத்தாள் கசியவிடப்படுகிறது. அதேவேளையில், தேர்வில் சிறப்பாகச் செயல்பட வேண்டிய கட்டாயமும் அழுத்தமும் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் கடன் வாங்குகிறார்கள். கல்வியை தொடர்ந்து கற்க பெரும் நிதிச் சுமையை சுமக்கிறார்கள். ஆனாலும், அதற்கான பலன் கிடைப்பதில்லை. இது ஓர் ஆழமான கட்டமைப்புச் சார்ந்த பிரச்சினை.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வினாத்தாள் கசிவு என்பது ஏதோ ஒரு தேர்வில் மட்டும் நடப்பதல்ல. அது ஒவ்வொரு தேர்விலும் நடைபெறுகிறது. எனவே, நாம் அனைவரும் உண்மையாகவே மாணவர்களுக்கு துணை நின்று, ஆதரவளித்து, மாற்றத்தை உருவாக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிக்கொணரும் நோக்கில் பல்வேறு தொடர் மாநாடுகளுக்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்த மாநாடுகள் நடைபெற உள்ளன. நாளை (ஜூன் 17) ராஜஸ்தானின் கோடா நகரில் தொடங்கும் இந்த மாணவர்களுக்கான மாநாடு, தொடர்ந்து அலகாபாத் (ஜூலை 10), பாட்னா (ஜூலை 11), டெல்லி (ஜூலை 14) ஆகிய மாநகரங்களிலும் நடைபெற உள்ளது. மாணவர்கள், இளைஞர்களுக்கான அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் தேர்வு மோசடியால் பாதிக்கப்படும் பலரும் பங்கேற்கும் வகையில் இந்த மாநாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலக கார்கே வலியுறுத்தல்
பவானிபூர் தேர்தல் தோல்வியை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in