ஆந்திரப் பிரதேச தலைநகராக அமராவதியை அறிவிக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

ஆந்திரப் பிரதேச தலைநகராக அமராவதியை அறிவிக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஆந்திரப் பிரதேசத்தின் ஒரே மற்றும் நிரந்தரத் தலைநகராக அமராவதியை அறிவிக்கும் மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் 2014-ஐ திருத்துவதற்கான இந்த மசோதா மக்களவையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தப்பட்டு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது குறித்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், ‘‘ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் 2014-ல், மாநிலப் பிரிவினைக்குப் பிறகு ஆந்திரப் பிரதேசத்துக்கு ஒரு புதிய தலைநகர் நிறுவப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகர் குறித்த இந்த மசோதா, ஒரு நிர்வாக முடிவைவிட பலமடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து கோடிக்கும் அதிகமான மக்களின் பெருமை, நம்பிக்கை மற்றும் ஜனநாயக உறுதிப்பாட்டை மீட்டெடுக்கும் ஒரு அடையாளமாகத் திகழ்கிறது. இது அம்மாநிலத்துக்கும் உலகெங்கும் வாழும் தெலுங்கு சமூகத்துக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணம்’’ என குறிப்பிட்டார்.

இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயடு, ‘‘நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு தெளிவை இந்த மசோதா வழங்குகிறது. நாட்டின் அரசியல் தலைமை மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் மீதான புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையின் அடையாளமாக இது திகழ்கிறது. இது மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு தருணம். இது வெறும் ஒரு தலைநகரை அடையாளம் காண்பது பற்றியது மட்டுமல்ல; ஆந்திரப் பிரதேசத்தின் எதிர்காலத்தையும் சுயமரியாதையையும் மறுவரையறை செய்வது பற்றியது.

ஆந்திரப் பிரதேசம் பிரிவினைக்கு எதிரானது அல்ல. ஆனால் பிரிவினை மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்தே அது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது’’ என குறிப்பிட்டார்.

இந்த மசோதா குறித்துப் பேசிய ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர் எர்ரம் வெங்கட சுப்பா ரெட்டி, ‘‘இந்த மசோதாவை அதன் தற்போதைய வடிவில் நாங்கள் எதிர்க்கிறோம். ஏனெனில், அமராவதியை அமைப்பதற்காக தங்கள் நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் இந்த மசோதாவில் தீர்வு இல்லை’’ என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஆந்திரப் பிரதேசத்துக்கு புதிய தலைநகர் அமைந்ததற்காக அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும் இது சட்ட வடிவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரப் பிரதேச தலைநகராக அமராவதியை அறிவிக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
ராகவ் சத்தாவிடம் இருந்து மாநிலங்களவை கட்சித் துணைத் தலைவர் பதவியை பறிக்க ஆம் ஆத்மி நடவடிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in