

நந்திகிராம்: மேற்குவங்க முதல் கட்ட வாக்குப் பதிவை அமைதியாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என்று பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவராகவும் முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்த சுவேந்து அதிகாரி, கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தார். அப்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து அவர் போட்டியிட்டார். இந்த தொகுதியில் மம்தாவை சுவேந்து அதிகாரி தோற்கடித்தார்.
இதன்பிறகு பவானிபூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம், பவானிபூர் ஆகிய 2 தொகுதிகளில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். இதில் நந்திகிராம் தொகுதியில் திரிணமூல் மூத்த தலைவர் பபித்ரா கர்ரையும் பவானிபூரில் முதல்வர் மம்தாவையும் அவர் எதிர்கொள்கிறார்.
நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி, நந்தனா அக்பர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குச் செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலுக்கு முந்தைய நாள் இரவில் அமைதியை சீர்குலைக்க திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால், பலத்த பாதுகாப்புக் காரணமாக அவர்களால் வன்முறை சம்பவங்களை அரங்கேற்ற முடியவில்லை. முதல் கட்ட தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் கணிசமாக அதிகரித்து உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது. இந்த தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். முதல்வர் மம்தா ஆட்சியில் சனாதன தர்மம் அழிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.