ஊழல் முறைகேடு: அமைச்சர் நாகேந்திராவின் ராஜினாமாவை வலியுறுத்தி கர்நாடகாவில் பாஜக ஆர்ப்பாட்டம்

ஊழல் முறைகேடு: அமைச்சர் நாகேந்திராவின் ராஜினாமாவை வலியுறுத்தி கர்நாடகாவில் பாஜக ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.187.3 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக அமைச்சர் நாகேந்திரா பதவி விலக வலியுறுத்தி சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

கர்நாடகாவின் திட்டம் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சரான நாகேந்திரா, இதற்கு முன்பு பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.187.3 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கில் கடந்த 2024-ம் ஆண்டு அமலாக்கத்துறையால் நாகேந்திரா கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அதே ஆண்டு மே 31-ம் தேதி அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், டி.கே.சிவக்குமார் முதல்வரானதை அடுத்து நாகேந்திரா திட்டம் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக கடந்த 3-ம் தேதி பதவியேற்றார்.

நாகேந்திராவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் உள்ளதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெங்களூருவில் உள்ள மாநில சட்டப்பேரவை வளாகமான விதான் சவுதா வளாகத்தை முற்றுகையிடும் நோக்கில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில பாஜக தலைவர் பி.ஒய்வ. விஜயேந்திரா, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா, மூத்த தலைவர்கள், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, நாகேந்திராவின் ராஜினமாவை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ அஸ்வத் நாராயணன் கூறும்போது, “காங்கிரஸ் கட்சி தலித் விரோத போக்கு கொண்டது. தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை அவர்கள் கொள்ளையடித்துள்ளனர். நாகேந்திரா பட்டயல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால், அவரே பட்டியல் பழங்குடியினருக்கான பணத்தை கொள்ளையடித்துள்ளார். இது நாட்டின் சட்டத்துக்கு எதிரானது” என்று கூறினார்.

பாஜக மூத்த தலைவர் சி.டி.ரவி, “வால்மீக வளர்ச்சி ஆணையத்தின் நிதியை முறைகேடாகக் கையாண்டதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டவர்” எனத் தெரிவித்தார்.

பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக விதான் சவுதா அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். விதான் சவுதாவை முற்றுகையிடும் நோக்கில் முன்னேறிய பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

ஊழல் முறைகேடு: அமைச்சர் நாகேந்திராவின் ராஜினாமாவை வலியுறுத்தி கர்நாடகாவில் பாஜக ஆர்ப்பாட்டம்
“கேரளாவின் வளர்ச்சிக்கு தமிழகத்தின் மலைகளையும் பாறைகளையும் ஏன் அழிக்க வேண்டும்?” - வேல்முருகன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in