

ஏலூரு: கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி பக்தருக்கு தேவஸ்தான ஊழியர் உணவை ஊட்டி விட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ஆந்திராவில் உள்ள ஏலூரு பகுதியில் பிரசித்தி பெற்ற துவாரகா திருமலாவில் பெருமாள் கோயில் உள்ளது. அங்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பீமடோலு மண்டலம், பாத்தூரு கிராமத்தை சேர்ந்த ராம்பாபு என்ற மாற்றுத் திறனாளிபக்தர், இக்கோயிலுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
தரிசனத்துக்கு பின் அவர், அன்னதானம் வழங்கும் இடத்துக்குச் சென்று உட்கார்ந்தார். அவருக்கு வாழை இலை போட்டு சாப்பாடு பரிமாறப்பட்டது. ஆனால், ராம்பாபுவுக்கு இரு கைகளும் இல்லாததால் அவர் குனிந்து சாப்பிட மிகவும் கஷ்டப்பட்டார். இதனை கண்ட தேவஸ்தான பெண் ஊழியர் காயத்ரி அந்த பக்தரிடம் சென்று, அவருக்கு உணவை ஊட்டி விட்டார். பக்தரும் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு, ஊழியர் காயத்ரிக்கு நன்றி தெரிவித்து விட்டு புறப்பட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது. பலர் காயத்ரியின் மனிதாபிமான செயலை பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோவைப் பார்த்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ‘சபாஷ் காயத்ரி’ என தலைப்பிட்டு, மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற வாக்கியத்துக்கு எடுத்துக்காட்டாக நடந்து கொண்ட காயத்ரிக்கு எனது வாழ்த்துகள். அவரை மனதார பாராட்டுகிறேன் என்று கூறி உள்ளார்.