

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டம் லோதன் கா புர்வா கிராமத்தைச் சேர்ந்த யசோதா லோதி பிளஸ் 2 படித்துள்ளார். ஆங்கிலம் தெரியாத அவர் யூடியூப்பில் பல வீடியோக்களைப் பார்த்து, அதில் வரும் சொற்களைத் திரும்பச் சொல்லிப் பழகி, தனக்கென தனித்துவமான முறையை உருவாக்கி ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார்.
இதையடுத்து 2019 முதல் ‘இங்கிலீஷ் வித் வில்லேஜ் மேடம்’ என்ற யூடியூப் சேனலைத் தொடங்கி, பலருக்கும் ஆங்கில வகுப்பு நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் ‘இங்கிலீஷ் வித் தேஹாதி மேடம்’ என்ற பெயரில் அறியப்படுகிறார். புத்தகங்களில் உள்ள கடினமான ஆங்கிலத்தைவிட, அன்றாட உரையாடலில் பயன்படும் எளிய ஆங்கிலத்துக்கே முக்கியத்துவம் அளித்ததால் அவர் பிரபலமானார்.
யூடியூப் முயற்சியில் தொடக்கத்தில் கணவருக்குப் பெரிய நம்பிக்கை இல்லை என்று கூறும் யசோதா, சமீபத்தில் வயலில் வேலை செய்தபடி வீடியோ பதிவு எடுத்தபோது அவர் திட்டியதாகவும், ஆனாலும் தொடர்ந்து பதிவு செய்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் அந்த வீடியோவை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருப்பதை அவர் பார்த்துள்ளார். இதையடுத்து, அவருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
அதே நாளில் அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்ததாகவும், தற்போது 5.83 லட்சத்துக்கும் மேல் உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் மாதம் ரூ.35,000 வரை வருமானம் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “வயலில் வேலை செய்யும் கிராமத்துப் பெண்ணாக இருந்த எனது சிறிய பதிவு, நான் மிகவும் மதிக்கும் ஒருவரைச் சென்றடைந்தது மிகவும் சிறப்பான தருணம்.
பிரியங்காவின் அந்தச் சிறிய செயல் எனக்குப் பெரும் மகிழ்ச்சியையும், தொடர்ந்து கற்கவும் உழைக்கவும் படைக்கவும், நானாகவே இருக்கவும் ஊக்கத்தையும் அளித்துள்ளது. உங்கள் சிறிய முயற்சிகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்” என பதிவிட்டுள்ளார். பிரியங்கா மட்டுமின்றி, நடிகை மிருணாள் தாக்கு்ர். நடிகர்கள் அபய் தியோல், ஆர்.மாதவன் ஆகியோரும் பராராட்டு தெரிவித்துள்ளனர்.