

ஸ்ரீநகர்: காஷ்மீரின் உயரமான பகுதிகளில் இரவு முழுவதும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இரவுநேர வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கு கீழே சென்றுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கந்தர்பால் மாவட்டத்தில் ஸ்ரீநகர்- டிராஸ் இடையிலான சோஜிலா கணவாய், மினாமர்க், பல்தால் ஆகிய இடங்களில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இதுபோல் பந்திபோரா மாவட்டத்தின் குரேஸ் பள்ளத்தாக்கில் உள்ள துலைல் பகுதியிலும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. ஸ்ரீநகர் மற்றும் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளை அதிகாலையில் அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்தது.
ஜம்மு காஷ்மீரில் மிகவும் குளிரான இடமாக புல்வாமா இருந்தது. அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 2.7 டிகிரியாக பதிவாகியுள்ளது.
தெற்கு காஷ்மீரில் காசிகுண்ட், கோகர்நாக் ஆகிய இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.8 டிகிரியாக பதிவானது. அதேநேரத்தில் வடக்கு காஷ்மீரின் குப்வாராவில் இது 1.2 டிகிரியாக இருந்தது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.