

புதுடெல்லி: மோடி-ஆர்எஸ்எஸ் ஆட்சியை அகற்ற உண்மை மற்றும் அகிம்சை வழியில் செயல்படுவோம் என்று ராகுல் காந்தி கூறினார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘வாக்குத் வாக்கு திருட்டு, பதவி விலகுங்கள்’ முழக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் மீது கடும் தாக்குதலை தொடுத்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்வீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பாஜகவுக்காக பணிபுரிவதாக குற்றம் சாட்டினார்.
இக்கூட்டத்தில் ராகுல் மேலும் பேசியதாவது: நாங்கள் சத்தியத்தின் பக்கம் நின்று பிரதமர் நரேந்திர மோடி-ஆர்எஸ்எஸ் அரசை அதிகாரத்திலிருந்து அகற்றுவோம். அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது, அவர்கள் வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறார்கள்.
பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் பெண்களுக்கு பாஜக அரசு தலா ரூ.10,000 பணப் பரிமாற்றம் செய்தது. ஆனால் தேர்தல் ஆணையம் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான இந்தப் போரில் பாஜக அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
தேர்தல் ஆணையர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் புதிய சட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளார். நாங்கள் இந்த சட்டத்தை முன்தேதியிட்டு மாற்றுவோம். தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். இதற்கு காலதாமதம் ஆகலாம், ஆனால் இறுதியில் உண்மைதான் வெல்லும். மோடியையும் அமித் ஷாவையும் தோற்கடிக்க நாங்கள் உண்மை மற்றும் அகிம்சை வழியில் செயல்படுவோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.