

அன்ஷுல் குஞ்சா
ஹைதராபாத்: அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் 28 வயது தெலங்கானா இளைஞர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தெலங்கானாவின் மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டம் குண்ட்லபோச்சம்பள்ளியை சேர்ந்தவர் அன்ஷுல் குஞ்சா (28). அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம். பிலடெல்பியாவில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவர் கூடுதல் வருமானத்துக்காக வார இறுதி நாட்களில் பீட்சா டெலிவரி செய்யும் பணியை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் வடக்கு பிலடெல்பியாவில் ஆள் நடமாட்டமில்லாத ஒரு இடத்துக்கு பீட்சா டெலிவரி செய்யச் சென்றுள்ளார். அப்போது அவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
இது தொடர்பாக பிலடெல்பியா காவல்துறை தலைமை ஆய்வாளர் ஸ்காட் ஸ்மால் கூறுகையில், “சம்பவ இடத்திலிருந்து 3 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன. மிக அருகில் இருந்து அன்ஷுல் சுடப்பட்டதை இது காட்டுகிறது. அன்ஷுல் தனது வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்ற போது கருப்பு ஆடை அணிந்த இருவர் அவரைப் பின் தொடர்வதை கண்காணிப்பு கேமரா பதிவு காட்டுகிறது. அன்ஷுலிடம் இருந்து எதுவும் திருடப்படவில்லை” என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக தெலங்கானாவில் இருக்கும் அன்ஷுலின் சகோதரி தன்வி கூறுகையில், “பாழடைந்த ஒரு இடத்தில் பீட்சா டெலிவரி செய்யுமாறு அவருக்கு கூறப்பட்டுள்ளது. திட்ட மிட்டு அன்ஷுல் அங்கு வரவழைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அவர்களின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.
அன்ஷுல் மிகவும் அன்பானவன். எப்போதும் மகிழ்ச்சியாகவும் இருப்பவன். அவன் அமெரிக்கா செல்ல எந்தவொரு கட்டாய காரணமும் இல்லை. ஆனாலும் நாங்கள் அனுப்பி வைத்தோம். எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளை அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டாம்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் "அன்ஷுலின் உடலை விரைவில் இந்தியா கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும். எனது சகோதரனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். யார் மீதும் எங்களுக்கு சந்தேகம் இல்லை என்றாலும், இதற்கு காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும். இதற்கு முன் அன்ஷுலின் சங்கிலி, போன் மற்றும் பணம் அங்கு திருடப்பட்டன. ஆனால் உயிருக்கு ஆபத்தான தாக்குதலை அவன் எதிர்கொண்டதில்லை" என்றார்.
இதற்கிடையில் கொலை தொடர்பாக தகவல் கொடுப்பவர்களுக்கு பிலடெல்பியா போலீஸார் 20,000 டாலர் வெகுமதி அறிவித்துள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆர்டர் செய்த நபரின் தொலைபேசி எண் உள்ளது. அவருக்கு கொலையில் தொடர்புள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தூதரகத்தின் பதில்: "இதற்கிடையில் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், “பிலடெல்பியாவில் இந்திய இளைஞர் அன்ஷுல் குஞ்சா இறந்த செய்தி எங்களை மிகுந்த வேதனை அடையச் செய்துள்ளது. இந்த துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். அன்ஷுலின் குடும்பத்தினருடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.