

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி ஷாபாத் அருகே வசிக்கும் மைனர் பெண் (17) ஒருவருக்கு, தெய்வால கூடா பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (38) என்பவர், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மைனர் பெண், அவரது தாய் லட்சுமி, பாட்டி ருக்கம்மாள் ஆகியோர் ஷாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், போலீஸார் விசாரணை நடத்தி ராஜ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீனில் ராஜ்குமார் வெளியே வந்தார். பின்னர் அன்று இரவே தன் மீது புகார் அளித்த மைனர் பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். அவரைப் பார்த்ததும் பயந்து ஓடிய அந்த பெண்ணின் கைகளை பிடித்து கொண்டு வெளியே இழுத்துச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, பெண்ணின் தாய் லட்சுமியும், பாட்டி ருக்கம்மாவும் ராஜ்குமாரைத் தடுத்தனர். இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், லட்சுமி மற்றும் ருக்கம்மாவைச் சரமாரியாகக் கத்தியால் வெட்டினார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர் அந்த மைனர் பெண்ணை அகில் சாகர் ஏரிக்கரை அருகே கொண்டு சென்று அவரையும் படுகொலை செய்துள்ளார்.
அதன் பின்னர், நேராக தனது வீட்டுக்கு சென்ற ராஜ்குமார், அங்கிருந்த தனது மனைவி சரிதா (33), மகன்கள் பரிக் ஷித் (4), தைவீக் ஷி (2) ஆகிய மூவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
அதன்பின், தனது தந்தை அருண்குமாருக்கு போன் செய்து, 6 பேரை கொன்று விட்டேன். நானும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறி உள்ளார். அதிர்ச்சி அடைந்த அருண் குமார் உடனடியாகப் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியினரே நடுங்கும் அளவுக்கு இந்த 6 கொலைகள் நிகழ்ந்துள்ளன.
தலைமறைவான ராஜ்குமாரை 7 தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவரைப் பற்றி தகவல் கொடுத்தாலோ அல்லது பிடித்து ஒப்படைத்தாலோ ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ரங்காரெட்டி போலீஸார் அறிவித்துள்ளனர்.