தெலங்கானா: கொடுத்த குக்கர், பணத்தைக் கேட்டு தோல்வி அடைந்த காங். வேட்பாளர் தகராறு
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில், 7 மாநகராட்சிகள், 116 நகராட்சிகளுக்கு தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், நேற்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 4 மாநகராட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. ஒரு மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது. மீதமுள்ள 2 மாநகராட்சிகளில் இழுபறி நிலை நீடித்தது.
நகராட்சி மன்றங்களை பொருத்தவரை, மொத்தமுள்ள 2581 வார்டுகளில் 1342 வார்டுகளில் காங்கிரஸ், 718 பிஆர்எஸ், 258 பாஜக, மற்றவர்கள் 251 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், அஸ்வராவ் பேட்டை நகராட்சி10-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தோல்வி அடைந்தார். இதனால் அவர் ஆத்திரம் கொண்டு, தான் போட்டியிட்ட வார்டுக்கு சென்று, வாக்களிக்க தான் கொடுத்த பணம், குக்கர்களை மீண்டும் தனக்கே திரும்ப வழங்க வேண்டும் என கூச்சலிட்டார்.
இதனை கண்டு அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர், நாங்கள் என்ன உன்னிடம் பணம் கேட்டோமா? அல்லது வீட்டிற்கு குக்கர் வாங்கி தர சொன்னோமா? தேர்தலில் வெற்றி பெற நீதான் எங்களுக்கு வலுக்கட்டாயமாக வழங்கினாய் என சரமாரியாக கேள்வி கேட்டனர். இதனால் அங்கு பொதுமக்கள் கூட தொடங்கினர்.
இதனை தொடர்ந்து சிலர் இவரிடம் வாங்கிய குக்கரை சாலையில் போட்டு விட்டு சென்றனர். தகவல் அறிந்த போலீஸார் பிரச்சினை இன்னமும் அதிகமாகாமல் தடுத்து, வேட்பாளரை அங்கிருந்து அழைத்து சென்று விட்டன.
ஆனால், தேர்தலில் பணம் அல்லது பொருளை வாக்குக்காக கொடுப்பது சட்டப்படி குற்றம். இதனால், வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். தவிர 988 வழக்குகள் இந்த தேர்தல் தொடர்பாக பதிவு செய்துள்ளோம் என்று தெலங்கானா மாநில டிஜிபி சிவ்தர் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
