

ஜெய்ப்பூர்: எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் அறிவிக்கப்பட்டுள்ளார். டிரேடிங் முறையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு மாற்றப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
24 வயதான ரியான் பராக், இதற்கு முன்பு கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மாற்று கேப்டனாக அணியை வழிநடத்தி உள்ளார். கடந்த சீசனில் சஞ்சு சாம்சன் காயமடைந்த நிலையில், அவருக்கு மாற்றாக 8 ஆட்டங்களில் அணியை ரியான் பராக் வழிநடத்தினார். அதில் இரண்டு வெற்றிகளை மட்டுமே அந்த அணி பதிவு செய்தது. இருப்பினும் அவரது பேட்டிங் சராசரி 38.57 என இருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 95 ரன்களை அவர் விளாசி இருந்தார்.
கடந்த 2019 சீசனில் ஐபிஎல் கிரிக்கெட்டில் ரியான் பராக் அறிமுகமானார். அப்போது முதல் இதுவரை அவர் விளையாடி உள்ள 7 ஐபிஎல் சீசன்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மட்டுமே ஆடியுள்ளார். கடந்த இரண்டு சீசன்களாக ராஜஸ்தான் அணி விளையாடிய அனைத்து ஆட்டத்திலும் அவர் விளையாடி இருந்தார். இதில் 2024 சீசனில் 573 ரன்களை குவித்து அசத்தி இருந்தார். மொத்தம் 84 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 1,566 ரன்களை அவர் எடுத்துள்ளார். பந்து வீசி ஏழு விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் அசாம் அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக 9 டி20 போட்டிகள் மற்றும் ஒரே ஒரு ஒருநாள் ஆட்டத்திலும் விளையாடி உள்ளார். கடந்த 2018-ல் ஐசிசி யு19 உலகக் கோப்பை தொடரில் பட்டம் வென்ற இந்திய அணியில் பராக் இடம்பெற்றிருந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரம்: ரியான் பராக் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், டோனோவன் பெரேரா, ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், துருவ் ஜூரல், ஜோஃப்ரா ஆர்ச்சர், க்வேனா மபாகா, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், நந்த்ரே பர்கர், சந்தீப் சர்மா, ஷிம்ரன் ஹெட்மயர், ஷுபம் துபே, துஷார் தேஷ்பாண்டே, யுத்வீர் சிங், ரவி பிஷ்னோய், ஆடம் மில்னே, ரவி சிங்க், சுஷாந்த் மிஸ்ரா, குல்தீப் சென், பிரிஜேஷ் சர்மா, அமன் ராவ், விக்னேஷ் புதூர், யஷ் ராஜ் புஞ்சா.