

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் கொண்ட சுரேகா
ஹைதராபாத்: தெலங்கானா முதல்வருக்கு எதிராக வனத்துறை அமைச்சர் கொண்ட சுரேகாவின் மகள் வெளிப்படையாக தெரிவித்த குற்றச்சாட்டுக்களை அடுத்து, அமைச்சரவையில் இருந்து கொண்ட சுரேகா நீக்கப்பட்டுள்ளார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தனது சகோதரரின் செயல்பாட்டில் இல்லாத நிறுவனத்துக்கு (ஷெல் கம்பெனி) முக்கியப் பகுதியில் உள்ள நிலத்தை மலிவான விலைக்கு வாரி வழங்கியதாக வனத்துறை அமைச்சர் கொண்ட சுரேகாவின் மகள் கொண்ட சுஷ்மிதா குற்றம்சாட்டி இருந்தார்.
இதேபோல், பணத்தைக் கொடுத்தே தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வனபர்தி எம்எல்ஏ மேகா ரெட்டி பெற்றதாக தெலங்கானா மூத்த காங்கிரஸ் தலைவரும் மாநில திட்டக் குழு துணைத் தலைவருமான சென்னா ரெட்டி குற்றம்சாட்டி இருந்தார்.
இவர்கள் இருவரின் இந்தக் கருத்தை அடுத்து, இருவரிடமும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தியது. தனது மகளின் கருத்துக்கு தான் பொறுப்பேற்க முடியாது என்றும், அது அவரது தனிப்பட்டக் கருத்து என்றும் சுரேகா விளக்கம் அளித்தார்.
இதையடுத்து விசாரணை அறிக்கை, கட்சியின் மாநில தலைவர் மகேஷ் குமார் கவுட் இடம் வழங்கப்பட்டது. இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதை அடுத்து, இருவரது பதவிகளையும் பறிக்க கட்சி மேலிடம் ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து கொண்ட சுரேகாவை நீக்குவதற்கான பரிந்துரை கடிதத்தை முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆளுநர் சிவ பிரதாப் சுக்லாவுக்கு அனுப்பிவைத்தார்.
இதேபோல், சென்னா ரெட்டியும் திட்டக் குழுவின் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக, தெலங்கானா மகளிர் ஆணையத்தின் தலைவர் கட்வால் விஜயலட்சுமி திட்டக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில மகளிர் ஆணையத் தலைவராக நெரெல்லா சாரதா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், காகதியா நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் தலைவராக முன்னாள் எம்பி சுதா ராணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுரேகா தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.